ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 2 பவுன் நகைகள் திருட்டு

திருக்கோவிலூர் அருகே ஆசிரியர் வீ்ட்டின் கதவை உடைத்து 2 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2022-05-29 16:28 GMT

திருக்கோவிலூர்

ஆசிரியர்

திருக்கோவிலூர் அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்(வயது 50). ஆசிரியரான இவர் தற்போது விழுப்புரத்தில் தங்கி இருந்து அத்தியூர் திருக்கை அரசு தொடக்கப்பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் அவரது தாய் இருதயமேரி(70) மட்டும் தனியாக இருந்து வருகிறார். ஆரோக்கியதாஸ் அவ்வப்போது ஒதியத்தூர் சென்று தாயை பார்த்து வருவார்.

நகைகள் திருட்டு

இந்த நிலையில் சம்பவத்தன்று இருதயமேரி அதே ஊரில் உள்ள தனது மகள் வீட்டில் சென்று தங்கியிருந்தார். பின்னர் மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 2 பவுன் நகைகளை காணவில்லை.

இருதயமேரி மகள் வீட்டுக்கு சென்றதை அறிந்து நோட்ட மிட்ட மர்ம நபர்கள் இரவு நேரம் வீ்டு புகுந்து நகைகளை திருடிச்சென்றுவிட்டனர். திருடு போன நகைகளின் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீஸ் வலைவீச்சு

இது குறித்து இருதயமேரி கண்டாச்சிபுரம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்