டிரைவரை கடத்தி கொலை செய்து எரித்த கொடூரம் போலீஸ் ஏட்டுக்கு வலைவீச்சு

சென்னை டிரைவரை கடத்தி கொலை செய்து எரித்து கொன்ற போலீஸ் ஏட்டை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-06-10 23:53 GMT

சென்னை,

சென்னை கே.கே.நகர், விஜய ராகவபுரம், காமராஜர் தெரு, 5-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 26). இவர் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள ஒரு இரும்புபொருட்கள் விற்பனை செய்யும் கடையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஐஸ்வர்யா (23). தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக பணியில் உள்ளார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இனிதாக வாழ்ந்த இந்த குடும்பத்தில், கடந்த மே மாதம் 31-ந்தேதி அன்று இடி விழுந்தது போன்ற துயரச்சம்பவம் நிகழ்ந்து விட்டது. ரவி திடீரென்று மாயமாகி விட்டார். வேலைக்கு போய் விட்டு திரும்பி வந்த ஐஸ்வர்யா, கணவர் மாயமானது அறிந்து பதறி போய் விட்டார். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

போலீசார் அழைத்து சென்றனர்

எனது வீட்டுக்கு எதிர் வீட்டில் போலீஸ் ஏட்டு செந்தில்குமார் என்பவர் வசிக்கிறார். அவருடன் கவிதா என்ற பெண் 2 குழந்தைகளுடன் வாழ்கிறார். கவிதா, போலீஸ்காரரின் கள்ளக்காதலி போல் தெரிகிறது. எனது குழந்தை போலீஸ்காரரின் வீடு அருகே சிறுநீர் கழித்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவிதா என்னிடம் சண்டை போட்டார். எனக்கு ஆதரவாக எனது கணவர் ரவி வந்தார். கவிதாவுக்கு ஆதரவாக ஏட்டு செந்தில்குமார் வந்தார். அப்போது நடந்த சண்டையில், எனது கணவர், அவரை அடித்து விட்டார்.

இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில், எனது கணவரை பார்த்து செந்தில்குமார் முறைத்துக்கொண்டே செல்வார். கவிதாவும், போலீஸ் ஏட்டு மேல் கைவைத்து விட்டாயா, உன்னை விடமாட்டோம், என்று மிரட்டியபடியே இருந்தார்.

இந்த நிலையில் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் இருந்து வருவதாக 5 பேர் வந்தனர். அவர்களில் 3 பேர் போலீஸ் சீருடையில் காணப்பட்டனர். 2 பேர் சாதாரண உடையில் இருந்தனர். அவர்கள் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டனர். விசாரணைக்கு அழைத்துசெல்வதாக எனது கணவரை அவர்கள் அழைத்து சென்றனர். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை.இதில் எனக்கு சந்தேகம் உள்ளது.

போலீஸ்காரர் செந்தில்குமாரின் ஏற்பாட்டின் பேரில்தான், என் கணவரை போலீஸ் என்று சொன்னவர்கள் அழைத்து சென்றிருக்க வேண்டும். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, எனது கணவரை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு ஐஸ்வர்யா தனது புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

கொலை செய்து எரிப்பு

இது தொடர்பாக கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள காட்டு பகுதியில் அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று மீட்கப்பட்டு உள்ளதாகவும், படாளம் போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றி கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், கே.கே.நகர் போலீசுக்கு தகவல் வந்தது.

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் பிணம், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.அந்த பிணத்தை கே.கே.நகர் போலீசார் பார்வையிட்டனர். அந்த பிணம் டிரைவர் ரவியின் உடல்தான் என்று தெரிய வந்தது.

அவரது முகம் முழுவதும் எரிய வில்லை. முகத்தில் உள்ள தாடி மற்றும் அவர் உடல் மீதுள்ள சரியாக எரியாத நிலையில் காணப்பட்ட சட்டை ஆகியவற்றை வைத்து, ரவியின் உடல் என்று போலீசார் உறுதி செய்தனர். ரவி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டதும் உறுதியானது.

போலீஸ்காரர் தலைமறைவு

இதற்கிடையில் போலீஸ்காரர் செந்தில்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் இருந்து, செம்பியம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றி விட்டனர். பின்னர் அங்கிருந்து ஆயுதப்படைக்கும் அவர் மாறுதல் செய்யப்பட்டு விட்டார். அவர் பணியில் சேராமல் தப்பி ஓடி விட்டார். மேலும் அவர் தங்கி இருந்த கே.கே.நகர் வீட்டை காலி செய்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா மேற்பார்வையில் போலீஸ்காரர் செந்தில்குமாரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. செந்தில்குமார் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர். ஒரு தனிப்படை கள்ளக்குறிச்சியில் முகாமிட்டுள்ளது. மற்றொரு தனிப்படை நெல்லையிலும், 3-வது படை சேலத்திலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

காலால் மிதித்து கொலை

இதற்கிடையில் செந்தில்குமாரின் காதலி கவிதாவை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், செந்தில்குமார்தான் ரவியை, தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து தீர்த்துகட்டியதாகவும், காலால் உயிர் நாடியில் மிதித்து கொன்றதும் தெரிய வந்தது.

ரவியின் பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி, ஆம்னி வேன் ஒன்றில் ஏற்றிச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும், கவிதா போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்