மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விவகாரம்:குண்டலப்புலியூர் ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்படும்கலெக்டர் பேட்டி

விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் இயங்கும் ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-02-14 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்கிற பெயரில் ஆசிரமம் இல்லம் இயங்கி வருகிறது. இங்கு சேர்க்கப்பட்டு இருந்தவர்களில் பலர் மாயமானதாக புகார் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக கெடார் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்ததும், மேலும் இங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக கெடார் போலீசார், ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சித்ரவதை செய்தல், உள்நோக்கத்துடன் அவர்களை வெளி மாநிலத்துக்கு அழைத்து செல்லுதல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 13 பிரிவின் கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கலெக்டர் ஆய்வு

இதற்கிடையே ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்ட கலெக்டர் பழனி நேற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு நேரில் சென்று அங்கு தங்கியிருந்தவர்களிடம் நலம் விசாரித்த அவர், மருத்துவ குழுவினரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

இதன் பின்னர் கலெக்டர் பழனி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலியல் துன்புறுத்தல்

குண்டலப்புலியூரில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தின் மீது பல புகார்கள் வந்ததன் பேரில் அரசு அதிகாரிகள் குழு விசாரணை செய்தனர். அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர், முதியோர்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்பட 109 ஆண்கள், 33 பெண்கள் என மொத்தம் 142 பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இந்த ஆசிரமம் உரிய அனுமதியின்றி நடத்தியதாக தெரியவந்தது. மேலும் அங்கு தங்கியிருந்தவர்கள் சித்ரவதைக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. எனவே, காவல்துறை சார்பில் 6 பேர் மீது வழக்குப்பதிந்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் 86 பேர் நலமுடன் இருக்கிறார்கள். அவர்களின் வீடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

மீதமுள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வேறு இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

சீல் வைக்க உத்தரவு

உரிய அனுமதியின்றி நடந்த இந்த ஆசிரமம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, சீல் வைக்க உத்தரவிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், மாற்றுதிறனாளி நல அலுவலர் தங்கவேல், தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி, ஒன்றிய குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர், நாராயணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சங்கீதா, மன நல மருத்துவ துறை தலைவர் புகழேந்தி, மருத்துவ கண்காணிப்பாளர் ஆடலரசன், பொதுமருத்துவதுறை தலைவர் சுப்பிரமணியன், நிலைய மருத்துவ அலுவலர் வெங்கடேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விநாயக முருகன், ஜோதி உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


---

போலீசாரின் விசாரணை வெளிப்படை தன்மையாக நடைபெற்று வருகிறது

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தகவல்

இச்சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறுகையில், ஆசிரம விவகாரம் குறித்து 6 பேர் மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 பேரை கைது செய்துள்ளோம்.

ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகி, அவரது மனைவி ஆகிய இருவரும் குரங்கு கடித்து காயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் குணமானதும் இருவர் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்.

இதன் விசாரணை வெளிப்படை தன்மையாக நடைபெற்று வருகிறது. இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 16 பேர் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இங்கு யாரும் மாயமாகவில்லை, அனைவரும் உள்ளனர். இந்த ஆசிரமம் சார்ந்த இல்லம் பெங்களூருவில் உள்ளது. அங்கிருந்துதான் 16 பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டவர் அங்கு காணாமல் சென்றுள்ளார். இதுகுறித்து அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த ஆசிரமம் இயங்கியுள்ளது. ஆட்கொணர்வு மனு மீது பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்