பெண்கள் சுயமரியாதையோடு வாழ கலைஞர் உரிமைத்தொகை திட்டம் வழிவகுக்கும் \அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு
பெண்கள் சுயமரியாதையோடு வாழ கலைஞர் உரிமைத்தொகை திட்டம் வழிவகுக்கும் என்று அண்ணாமலைநகரில் நடைபெற்ற தொடக்க விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.;
அண்ணாமலைநகர்,
மாதந்தோறும் ரூ.1000
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வாயிலாக குடும்ப தலைவிகள் மாதம் ரூ.1000 பெறுவதற்கான பற்று அட்டை மற்றும் மகளிர் உரிமை திட்ட தகவல் கையேட்டினையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
வாழ்க்கை தரத்தை உயர்த்தி...
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செம்மையாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் சுயமாக முன்னேறும் வகையில் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம், அரசு பள்ளியில் பயின்ற பெண் குழந்தைகள் உயர்கல்வி பயில ஏதுவாக புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
முன்னோடி திட்டம்
இதற்காக முதல்-அமைச்சரின் முன்னோடி திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக கடலூர் மாவட்டத்தில் மட்டும் 6 லட்சத்து 8 ஆயிரத்து 862 விண்ணப்பங்கள் வரப்பெற்றது. விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
உறுதிமொழி ஏற்பு
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கடலூர் அய்யப்பன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதாசுமன், அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் கதிரேசன், பதிவாளர் சிங்காரவேல், அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி, அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக சமூக நீதி நாளை முன்னிட்டு சமூக நீதி உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வாசிக்க அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.