ஆட்சி, கட்சியை திறமையாக நடத்தும் கலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடமே உள்ளது
ஆட்சியையும், கட்சியையும் திறமையாக நடத்துகிற கலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ஆட்சியையும், கட்சியையும் திறமையாக நடத்துகிற கலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அமைச்சர்களுக்கு பாராட்டு
விருதுநகர் தி.மு.க. முப்பெரும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
முப்பெரும் விழா பெரும்பாலும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அல்லது வேறு ஒரு அரங்கில் நடைபெறும். ஆனால் விருதுநகரில் ஒரு மாநில மாநாட்டுக்கு இணையாக ஒரு முப்பெரும் விழா நடைபெறுவதை நான் முதன் முதலாக பார்க்கிறேன். இந்த எழுச்சிக்கு, பாராட்டுக்கு உரியவர்கள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
இங்குள்ள பந்தல் முகப்பு குடவறைகோவில் போல் இருக்கிறது. இங்கு கூடி இருக்கிற தொண்டர்களை பார்க்கும் போது இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என தோன்றுகிறது. இந்த விழாவில் விருது பெற்ற 5 பேரையும் எனக்கு நன்றாக தெரியும். கட்சிக்காக உழைத்தவர்களை கவுரவிக்க வேண்டும் என்ற பழக்கத்தை கருணாநிதிதான் உருவாக்கினார்.
திறமையான தலைவர்
அந்த பழக்கத்தை நம்முடைய தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்கிறார். ஆட்சியை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு மு.க.ஸ்டாலின் சிறப்பாக நடத்தி வருகிறார். ஒரு தலைவன் கட்சிக்கும் தலைவனாக இருந்து, ஆட்சிக்கும் தலைவனாக இருப்பது சாதாரணமானதல்ல. இது கருணாநிதிக்கு கைவந்த கலை.
சிலர் ஆட்சியில் கவனம் செலுத்தினார்கள். கட்சியை கோட்டை விட்டார்கள். சிலர் கட்சியில் கவனம் செலுத்தினார்கள். ஆட்சியை கோட்டை விட்டார்கள். ஆனால், இப்போதைக்கு ஆட்சியையும், கட்சியையும் திறமையாக நடத்துகிற கலை தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மட்டுேம உள்ளது.
இந்தியாவில் உள்ள முதல்-அமைச்சர்களில் முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். பிரதமர் நரேந்திரமோடி தலைவர் ஸ்டாலினிடம் அரசியலை கடந்து நல்ல நட்பு பாராட்டுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கே.என்.நேரு
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
தி.மு.க.வில் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருந்த போதிலும் உழைத்தவர்களுக்கு பெருமை சேர்க்கவே இந்த முப்பெரும் விழா. இந்த விழாவில் விருது பெற்றவர்களின் பணி சிறப்பானது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கால் படாத கிராமமே இல்லை. ஒரு சிறிய கிராமத்தில் உள்ள தொண்டனை கூட நினைவு கூர்ந்து மு.க.ஸ்டாலின் பாராட்டுவார். விருது பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.ஆர்.பாலு
விழாவில் கலைஞர் விருதுபெற்ற தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பேசியதாவது:-
மிகப்பெரிய தலைவர்கள் பிறந்த ஊரான விருதுநகரில் இந்த முப்பெரும் விழா நடைபெற்றது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. இந்த பகுதியில் உள்ள சுக்கிலநத்தம் என்ற கிராமத்தில்தான் பெரியார் முதன்முதலில் சுய மரியாதை திருமணத்தை நடத்தினார்.
அதற்காக கூட இந்த விழா விருதுநகரில் நடைபெற தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம். நான் உள்பட 5 பேரை விருதுக்கு தேர்வு செய்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இறுதி வரை இந்த கட்சிக்காக நான் நன்றியோடு இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.