சோழபுரம் சிவன் கோவிலில் ஆனித்திருவிழா தொடங்கியது

சிவகங்கை மன்னர்களின் பட்டத்து கோவிலான சோழபுரம் அறம் வளர்நாயகி சமேத அருள்மொழி நாதர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-07-02 19:35 GMT

சிவகங்கை மன்னர்களின் பட்டத்து கோவிலான சோழபுரம் அறம் வளர்நாயகி சமேத அருள்மொழி நாதர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அருள்மொழிநாதர் கோவில்

சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அறம் வளர்நாயகி சமேத அருள்மொழி நாத சுவாமி கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலில் தான் மன்னர்களுக்கு பட்டம் சூட்டுவார்கள்.

இந்த கோவிலில் ஆனித் திருவிழா சிறப்புமிக்கது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

10-ந்தேதி தேரோட்டம்

இதையொட்டி தினசரி அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெறும். மேலும் தினசரி ஒரு வாகனத்தில் பகல் மற்றும் இரவில் சுவாமியும் அம்மனும் திருவீதி உலா வருவார்கள்.

9-ந்தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 10-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர். இரவு ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது.11-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. 12-ந்தேதியுடன் உற்சவ சாந்தி நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தக நாச்சியார் உத்தரவின்பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன், சோழபுரம் ஆத்மநாதகுருக்கள் மற்றும் சோழபுரம் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்