ஏலகிரிமலை கோடை விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்
ஏலகிரிமலை கோடை விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
ஏலகிரிமலையில் கோடை விழா நடத்துவது குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் அலுவலகத்தில், கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
ஏலகிரிமலையில் கோடை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழா நுழைவு வாயில் அலங்கார வளைவு, விழா மேடை, சாலையை சரியாக பராமரித்தல், தேவைப்படும் இடங்களில் சிக்னல் அமைத்தல், வளைவுகளில் பலகை புதுப்பித்தல், போக்குவரத்து சீரமைத்தல், பாதுகாப்பு மற்றும் வாகனங்களை தனியாக நிறுத்துவதற்கு இடத்தை ஒதுக்கீடு செய்தல் ஆகிய பணிகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் சரியாக மேற்கொள்ள வேண்டும்.
கண்காட்சி
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளை சிறந்தமுறையில் அமைத்து சம்மந்தப்பட்ட துறைகளின் திட்டங்களை தெளிவாக காட்சிபடுத்த வேண்டும்.
கலை நிகழ்ச்சிகள், மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டி, கைப்பந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், மாடுகளின் கண்காட்சி நடத்த வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி போன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாரம்பரிய உணவு திருவிழா நடத்த வேண்டும்.
சிறப்பாக நடத்த வேண்டும்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஏலகிரிமலை கோடை விழாவினை சிறந்த முறையில் நடத்துவதற்கு, அவரவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், மாவட்ட கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு புஷ்பராஜ், ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் முரளி, சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.