'அக்னிபத்' திட்டம் இளைஞர்களின் எதிர்கால கனவை நாசமாக்கும்
அக்னிபத்’ திட்டம் இளைஞர்களின் எதிர்கால கனவை நாசமாக்கும் என திருமாவளவன் எம்.பி. கூறினார்.;
சிக்கல்:
'அக்னிபத்' திட்டம் இளைஞர்களின் எதிர்கால கனவை நாசமாக்கும் என திருமாவளவன் எம்.பி. கூறினார்.
பேட்டி
நாகை மாவட்டம் கீழ்வேளூரில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.
எதிர்கால கனவை நாசமாக்கும்
டெல்லியில் காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ள ஜனாதிபதி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். 'அக்னிபத்' திட்டம் மோசடி திட்டம்.
இந்த திட்டம் இளைஞர்களின் எதிர்கால கனவை நாசமாக்கும். அதனால்தான் இந்த திட்டத்தை பா.ஜ.க. கூட்டணியை தவிர மற்ற அனைவரும் எதிர்க்கின்றனர்.
பா.ஜ.க. கட்டுப்பாட்டில் அ.தி.மு.க.
ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க.வின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது.அ.தி.மு.க.வை பா.ஜ.க. தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க.வை தனிமைப்படுத்தி அதை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட ஒரு மாற்று அணி வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.