தளி
உடுமலையில் புதர் மண்டிக்கிடக்கும் வட்டார போக்குவரத்து அலுவலக ஓடு பாதையை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகம்
வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலமாக புதிதாக ஓட்டுனர் உரிமம் எடுத்தல், புதுப்பித்தல், வாகன தகுதி சான்று, வாகனப்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த அலுவலக வளாகத்தில் ஓட்டுனர் உரிமம் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதையை சுற்றிலும் புதர் மண்டி செடிகள் முளைத்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
உடுமலைக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு வரப்பட்டது. இதனால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வெளியூருக்கு சென்று சேவையை பெறுவதில் ஏற்பட்டு வந்த காலதாமதம் நிவர்த்தி அடைந்தது. அலுவலக வளாகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஏதுவாக ஓடுபாதை அமைக்கப்பட்டது. அது முறையான பராமரிப்பு செய்யப்படாததால் பாதையை சுற்றிலும் புதர் மண்டி செடிகள் முளைத்து காணப்படுகிறது.
இதனால் அங்கு விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமைக்கப்பட்ட ஓடுபாதையை பராமரிப்பு செய்தும் அதை சுற்றி முளைத்துள்ள புதர் மற்றும் செடிகளை அகற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.