10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பு: சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்திற்கு பின்னடைவு
10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் வெளியான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்திற்கு பின்னடைவு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பின்னடைவு
பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப்போராட்டத்தை தி.மு.க. முன்னெடுத்து நடத்தி வந்தது.
இந்த வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.
சமூகநீதிக்கான குரல்
எனினும் தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுனர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும்.
சமூகநீதியை காக்க முதல் அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணில் இருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திட செய்ய ஒருமித்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.