கோபி பகுதியில் உரிய ஆவணம் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.45 ஆயிரம் மதிப்பிலான விதை நெல் விற்பனைக்கு தடை
கோபி பகுதியில் உரிய ஆவணம் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.45 ஆயிரம் மதிப்பிலான விதை நெல் விற்பனைக்கு தடை விதித்து வேளாண் அதிகாரி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
கோபி
கோபி பகுதியில் உரிய ஆவணம் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.45 ஆயிரம் மதிப்பிலான விதை நெல் விற்பனைக்கு தடை விதித்து வேளாண் அதிகாரி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
திடீர் ஆய்வு
ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் ஜெயராமன் தலைமையில் வேளாண்மை அதிகாரிகள் கோபி வட்டார பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆய்வின்போது சில விற்பனை நிலையங்களில் உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.45 ஆயிரத்து 162 மதிப்பிலான 4 ஆயிரத்து 125 கிலோ விதை நெல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
தரமான விதைகளை கொள்முதல்...
இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் ஜெயராமன் கூறியதாவது:-
சம்பா பருவ நெல் சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோபி வட்டாரத்தில் உள்ள அனைத்து தனியார் மொத்த மற்றும் சில்லறை விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற நெல் விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வினியோகிக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம் மற்றும் தனியார் ரக உண்மை நிலை விதைகளுக்கான பதிவு சான்று தொகுப்பாய்வு முடிவு, அறிக்கை நகல் ஆகியவற்றை தவறாமல் உற்பத்தியாளர்களிடம் பெற்று ஆய்வின்போது காண்பிக்க வேண்டும்.
நடவடிக்கை
புதிய ரகங்கள் இந்த பருவத்துக்கு ஏற்றவைதானா என்பதை அறிந்து கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். பருவத்துக்கு ஏற்பில்லாத ரகங்களை சாகுபடி செய்வதால் நட்டவுடன் விரைவில் கதிர் வருதல், கதிர் வராமலேயே இருத்தல் போன்ற பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே கொள்முதல் செய்த விதைகளை முறையாக பராமரிக்க வேண்டும். சரியான சேமிப்பு முறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் விதை விற்பனை செய்ய தடை விதிப்பதோடு உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். விதைகளுக்கான பகுப்பாய்வு, முடிவறிக்கை நகல் ஆகிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை முறைப்படி பராமரிக்க வேண்டும். விதை தொடர்பான அனைத்து தகவல்களை குறிப்பிட்டு விவசாயிகள் கையொப்பம் பெற்று விதைகளை விற்பனை செய்ய வேண்டும். இதில் சட்ட விதிகளை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கோபி விதை ஆய்வாளர் சுமையா மற்றும் வேளாண் அதிகாரிகள் உடனிருந்தனர்.