சென்னையில் காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கோவில்பட்டியைசேர்ந்தவருக்கு ரூ.1000 அபராதம்

சென்னையில் காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கோவில்பட்டியைசேர்ந்தவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-04 18:45 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் தேன்ராஜா (வயது 50). இவர் அரசின் உதவி பெறும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் நடத்தி வருகிறார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக கார் ஒன்றினை வைத்து பயன்படுத்தி வருகிறார். இதற்கு முறையாக அனைத்து வரிகளையும் அரசுக்கு செலுத்தியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி இரவு 8.57 மணிக்கு அவரது செல்போனுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில், இவருடைய கார் எண் பதிவிட்டு ஹெல்மெட் அணியவில்லை எனவும், அதற்காக ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாகவும் வந்துள்ளது. மேலும் அதில் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்செல்லும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

கோவில்பட்டியில் இருக்கும் காருக்கு சென்னையில் சென்றதாக அபராதம் விதித்தது மட்டுமின்றி, அதில் மோட்டார் சைக்கிள் புகைப்படம் இடம் பெற்றுள்ளது தனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்