49 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அமராவதி ஆற்றில் கரைப்பு
தாராபுரம் பகுதியில் இந்து மக்கள் கட்சி மற்றும் விசுவ இந்து பரிஷத் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 49 விநாயகர் சிலைகள் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து முன்னணியினர், விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் கடந்த 17-ந் தேதி இரவு தாராபுரம் வட்டார பகுதியில் சுமார் 135 சிலைகளை பொதுமக்கள் ஒத்துழைப்போடு பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதனை போலீசார் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் விஜர்சன ஊர்வலம் விசுவ இந்து பரிஷத் மற்றும் இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்பு சார்பில் நடந்தது. இந்து மக்கள் கட்சியினர் தாராபுரம் நகரம், வீராச்சிமங்கலம், தளவாய்பட்டிணம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடத்தினர். அதில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் 29 விநாயகர் சிலைகளும், இந்து மக்கள் கட்சி மாநில மகளிர் அணி செயலாளர் மதிவதனி தலைமையில் 9 சிலைகளும், விசுவ இந்து பரிஷத் கோட்ட பொறுப்பாளர் சின்ன குமாரவேல் தலைமையில் 11 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஊர்வலம்
அவைகள் நேற்று காலை 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டது. பின்னர், தாராபுரத்தில் பொள்ளாச்சி சாலையில் அமராவதி சிலை ரவுண்டானா பகுதியில் அணிவகுத்து வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மதியம் 1 மணி அளவில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் சஷ்டி சேனா இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி பேரணியை தொடங்கிவைத்தார்.
பொள்ளாச்சி சாலை வழியாக போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் அமராவதி ஆற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
அமராவதி ஆற்றில் கரைப்பு
பக்தர்கள் பாதுகாப்பு கருதி ஒவ்வொரு சிலைகளாக பெற்று தீயணைப்பு துறையினர் அமராவதி ஆற்றில் சிலைகளை கரைத்தனர். தாராபுரம் நகர ஒன்றிய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில்11 சிலைகளையும் தாராபுரம் உடுமலை சாலையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
கிராம கோவில் பூஜாரிகள் பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தரசாமி தலைமையில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அமராவதி ஆற்றுங்கரையை அடைந்தனர். இதனை முன்னிட்டு தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் அதிரடிப்படை வீரர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மூலனூர்
மூலனூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பாக பிரதிஷ்டை செய்யப்பட்ட 8 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டது. முன்னதாக மூலனூர் அண்ணா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். அதனைத்தொடர்ந்து மூலனூர் பகுதியைச் சேர்ந்த பெரமியம், லக்மநாயக்கன்பட்டி, கரையூர், முத்துகவுண்டர் வலசு, கடைவீதி, ஜே.ஜே. நகர் உள்பட 8 இடங்களில் இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு அண்ணா நகரில் இருந்து மூலனூர் கடைவீதி வழியாக வெள்ளகோவில் சாலை முதல் பேருந்து நிலையம் வரை ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் புதுப்பை அமராவதி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.