தாராபுரம்-உடுமலை சாலையில் புதிய சாக்கடை அமைக்கும் இடத்தை நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் ஆய்வு செய்தார்.
மழைநீர் வடிகால் வசதி
தாராபுரம்-உடுமலை சாலையில் பஸ் நிலையம் செல்லும் குறுக்கு சாலை பகுதியில் புதிய மழைநீர் வடிகால் வசதி மற்றும் சிறு பாலம் அமைப்பதற்கான இடங்களை நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் ஆய்வு மேற்கொண்டார். இந்த வழியில் சாக்கடை தண்ணீர் தேக்கி நின்று துர்நாற்றம் வீசி வந்தது. மேலும் மழைகாலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் இருந்து வந்தது.
இதையடுத்து அந்த பகுதியை அதிகாரிகளுடன் சென்று நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த வழியாக பஸ் நிலையத்துக்கு தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களில் சென்றும் வருவதால் சாலையோரம் தேங்கி நிற்கும் சாக்கடை தண்ணீர் துர்நாற்றம் வீசி வருவதால் மக்கள் அவதிப்பட்டனர். இதை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை சரிசெய்ய இப்பகுதியில் சாக்கடை அமைத்து தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடனுதவி
தாராபுரம் நகராட்சி பகுதியில் சிறு தொழில் முதலீட்டாளர்களின் எதிர்கால வாழ்க்கை திறனை ஊக்குவிக்கும் வகையில் சாலையோர தள்ளுவண்டி மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் 22 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கடனுதவிகளை வழங்கினார்.
அப்போது நகர செயலாளர் சு.முருகானந்தம், நகர்மன்ற துணைத் தலைவர் ரவிசந்திரன், நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு, உதவி பொறியாளர் காளீஸ்வரி, நகர நிலஅளவையாளர் கவிதா, நகர்மன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகர், மலர்விழி கணேசன், புனிதா சக்திவேல், சாஜிதா பானு, நகராட்சி பணியாளர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்