காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா

Update: 2023-06-09 16:32 GMT


குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 3 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

அவினாசி ஒன்றியம் பழங்கரை, சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம் ஆகிய 3 ஊராட்சி பகுதிகளில் 20 முதல் 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.

எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் 3 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தனர். பின்னர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், பழங்கரை ஊராட்சி துணைத்தலைவர் மிலிட்டரி நடராசன் ஆகியோர் கூறியதாவது:-

ீதீர்வு காண வேண்டும்

எங்கள் ஊராட்சியில் மக்கள்தொகை பல மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் குடிநீர் 5 ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட அதே அளவு கொடுக்கப்படுகிறது. மேலும் வாரம் ஒருமுறை வழங்கப்பட்ட தண்ணீர் கடந்த 2 ஆண்டுகளாக 20 முதல் 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற பகுதிகளுக்குதடையின்றி குடிநீர் வழங்கிவிட்டு பழங்கரை, சின்னேரி பாளையம், குப்பாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகள் மட்டும் புறக்கணிக்கப்படுகிறது. எங்கள் ஊராட்சி பகுதிக்கு மிக குறைந்த அளவு தண்ணீர் தந்துவிட்டு மிக அதிக அளவு வசூலிக்கின்றனர்.

அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்குவதுபோல் எங்களுக்கும் வழங்க வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வரை இடத்தை விட்டு நகரமாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேச்சுவார்த்தை

இது பற்றித் தகவல் அறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், குடிநீர் வடிகால் வாரிய இளநிலை பொறியாளர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முடிவில் அனைத்து பகுதிகளிலும் முறையாக குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறிய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்