சிகிச்சைக்கு வருபவர்கள் அதிகரிப்பு

Update: 2023-07-18 16:59 GMT


திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்கேன் எடுக்க அலைக்கழிப்பு

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், சி.டி.ஸ்கேன் எடுக்க கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள், ஆண்கள் என வந்து செல்கிறார்கள். இவ்வாறு ஸ்கேன் செய்ய வருபவர்களை உடனடியாக ஸ்கேன் எடுக்காமல் 10 நாட்களுக்கும் மேலாக அலைக்கழிப்பதாக கூறி நேற்று காலை ஸ்கேன் எடுக்கும் மையம் முன் நோயாளிகள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கூறும்போது, 'குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு குறித்த நேரத்தில் ஸ்கேன் எடுத்து தராமல் அலைக்கழிக்கிறார்கள். டாக்டர் ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கிறார்கள். ஆனால் ஸ்கேன் எடுக்கும் மையத்தில் உள்ளவர்கள் 10 நாட்கள் கழித்து வருமாறு கூறுகிறார்கள். இன்று (நேற்று) ஸ்கேன் எடுக்க வந்தால் கூட்டம் அதிகமாக இருக்கிறது பிறகு வாருங்கள் என்கிறார்கள். பெண்களுக்கு மார்ப்பக கட்டிக்கு ஸ்கேன் எடுக்க வந்தால் 10 நாட்கள், 15 நாட்கள் என அலைக்கழிக்கிறார்கள். குழந்தைக்கு வயிற்றில் கட்டியை ஸ்கேன் எடுக்க நாட்கணக்கில் காலதாமதப்படுத்துகிறார்கள். உடனடியாக ஸ்கேன் எடுப்பதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்' என்றனர். இதைத்தொடர்ந்து ஸ்கேன் மையத்தில் அவர்களுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதன்காரணமாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சிகிச்சைக்கு வருபவர்கள் அதிகரிப்பு

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசனிடம் கேட்டபோது, 'அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நாளொன்றுக்கு 800 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றனர். ஆனால் புதிய கட்டிடம் கட்டிய பிறகு நாளொன்றுக்கு புறநோயாளிகளாக மட்டும் 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள். இவர்களில் தினமும் 100 பேருக்காவது ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் ஸ்கேன் மையத்தில் 3 மருத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 80 சி.டி. ஸ்கேன், 10 எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றை எடுத்து பார்க்க முடியும். ஆனால் மக்கள் அதிகமாக வருவதால் அவர்களால் சமாளிக்க முடியவில்லை. கதிர்வீச்சு காரணமாக 3 மருத்துவ நிபுணர்களில் ஒருவருக்கு 1 மாதம் வீதம் மருத்துவ விடுப்பு அவசியம் கொடுக்க வேண்டும். அவ்வாறு சென்றுவிட்டால் 2 பேர் மட்டுமே சமாளிக்க வேண்டும். முடிந்தவரை ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். மேலும் 3 மருத்துவ நிபுணர்கள் வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம்' என்றார்.

மேலும் செய்திகள்