தாணுமாலய சாமி கோவிலில்மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றம்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-12-28 18:45 GMT

சுசீந்திரம்:

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மார்கழி பெருந்திருவிழா

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜையும், 8.45 மணிக்கு கொடி பட்டத்தை மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து காலை 9.15 மணிக்கு நித்தியகாரிய யோக ஸ்தானிகர் தெற்குமண்மடம் திலீபன் நம்பூதிரி கொடிப்பட்டதை பெற்று தாணுமாலயசாமி சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றினார். அப்போது மேளதாளம், பஞ்ச வாத்தியம் இசைக்க பட்டாசு வெடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜைகளை வட்ட பள்ளி மடம் ஸ்தானிகர் டாக்டர் சிவபிரசாத் நடத்தினார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஐகோர்ட்டு நீதிபதி

நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பாய நீதிபதி லதா பஷ்பராஜ், பக்தர்கள் சங்க நிர்வாகிகள், ஊர் தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்களுக்கும் கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருமுறை பேரவை மற்றும் தாணுமாலய பக்தர்கள் சங்கம் சார்பில் கோவிலில் இருந்து திருமுறை பெட்டக ஊர்வலம் 4 ரத வீதிகள் வழியாக திருவாவடுதுறை ஆதீனம் மடத்தை சென்றடைந்தது.

மக்கள்மார் சந்திப்பு

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், அலங்காரதீபாராதனை, சமய சொற்பொழிவு, சொல்லரங்கம், பக்தி இன்னிசை, பக்தி மெல்லிசை, பரதநாட்டியம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன,

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும், இரவு 11 மணிக்கு சுவாமி வீதி உலா வரும்போது கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்ரமணிய சுவாமி, வேளிமலை குமாரசாமி ஆகியோர் தனது தாய், தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காண வரும் "மக்கள் மார் "சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேரோட்டம்

வருகிற 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், காலை 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் கோவில் முன் சுவாமி, அம்பாள், பெருமாள் மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் காட்சியும் நடக்கிறது. 3-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நடைபெறுகிறது.

5-ந் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் என மூன்று தேர்கள் வலம் வரும். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சியும், திருவிழாவின் இறுதி நாளான 6-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், இரவு 9 மணிக்கு ஆராட்டு விழாவும் நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும் பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்