தாந்தோணிமலை அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா

உடற்கல்வி இயக்குனர் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரி தாந்தோணிமலை அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-02 18:30 GMT

உடற்கல்வி இயக்குனர் மீது வழக்கு

கரூர் தாந்தோணிமலையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கல்லூரியில் கடந்த 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கல்லூரி வளாகத்தில் அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் ஏற்பாட்டில் பிரபலங்கள் புகைப்படங்களுடன் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் காரை வழிமறித்து, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கரூர் வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பேரில், தாந்தோன்றிமலை போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவ-மாணவிகள் தர்ணா

இந்தநிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்ப்பட்டோர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடிரென தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனக்கூறி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகிகள் மற்றும் தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உங்கள் கோரிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து, தங்கள் வகுப்புகளுக்குள் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்