கண்புரை அறுவை சிகிச்சையில் மாநிலஅளவில் தஞ்சாவூர் 2-ம் இடம்

கண்புரை அறுவை சிகிச்சையில் மாநிலஅளவில் தஞ்சாவூர் 2-ம் இடம்

Update: 2023-02-17 20:18 GMT

கண்புரை அறுவை சிகிச்சையில் மாநிலஅளவில் தஞ்சாவூர் 2-ம் இடம் பிடித்துள்ளது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

சிறப்பு கருத்தரங்கம்

தஞ்சை ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் மகளிர் மற்றும் மகப்பேறு துறை சார்பில் பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தலைமை தாங்கினார்.

சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் நமச்சிவாயம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் திலகம், குடும்பநல இணை இயக்குனர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகப்பேறு துறைத் தலைவர் ராஜராஜேஸ்வரி வரவேற்றார். இந்த கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

2-ம் இடம்

கண்புரை அறுவை சிகிச்சையில் மாநில அளவில் தஞ்சாவூர் 2-ம் இடம் பிடித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் உறுப்பு தானங்களிலும் நாம் முன்னோடியாக இருந்து வருகிறோம். சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை போன்ற பெரிய மாவட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும் பிரசவங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தஞ்சை மாவட்டம் மாநிலஅளவில் 5-வது இடத்தில் உள்ளது. இது நமது மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும்.

இதற்காக டாக்டர்கள், செவிலியர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால் நல்ல மருத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. கடந்த 3 மாதங்களில் உடல்உறுப்பு தானங்களில் முன்னோடியாக உள்ளது. மகப்பேறு இறப்பு விகிதத்தை பார்க்கும்போது மாநிலஅளவை விட அதிகம் இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க தான் இந்த கருத்தரங்கம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் நிலைய மருத்துவ அதிகாரி செல்வம், கண்காணிப்பாளர் ராமசாமி, துணை கண்காணிப்பாளர் ரவி, மருத்துவ நிபுணர்கள் பராந்தகன், உதய அருணா, அஞ்சு பத்மாசேகர் ஆகியோர் பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்