தந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
குன்னூரில், பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
குன்னூர்
குன்னூரில், பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
மாரியம்மன் கோவில்
குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனை குன்னூரில் உள்ள பல்வேறு சமூகத்தினர் உபயமேற்று நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பக்தர்களின் பங்களிப்புடன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முளைப்பாலிகை ஊர்வலம்
அதன்படி நேற்று மகா கணபதி பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்களுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து கன்னி மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்த குடம் மேள-தாளம் முழங்க ஊர்வலமாக யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.
பின்னர் வி.பி.தெரு சந்தான வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு யாகசாலையை அடைந்தது. தொடர்ந்து 2-ம் கால யாக பூஜை நடந்தது. அதன்பின்னர் 3-ம் கால யாக பூஜை, யந்திர ஸ்தாபனம், கோபுர கலசம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம், இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, 9.20 மணி முதல் 10.20 மணிக்குள் யாத்ரா தான சங்கல்பத்தை ெதாடர்ந்து விமானம், கொடிமரம், தந்தி மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் குன்னூர் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.