தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-04-07 18:45 GMT

குன்னூர்

குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேர்த்திருவிழா

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேல்கடை வீதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஒரு மாத காலம் வெகு சிறப்பாக நடைபெறும். இதனை குன்னூரில் உள்ள பல்வேறு சமூகத்தினர் உபயமேற்று நடத்தி வருகின்றனர். கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. அதன் பிறகு கடந்த ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இதேபோல் இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை கர்நாடக சனாதன சாஹித்திய சங்கம் உபயமேற்று நடத்தியது. இதையொட்டி ஆழ்வார்பேட்டை கோதண்டராமர் கோவிலில் இருந்து ஊர்வலம் மேள-தாளத்துடன் புறப்பட்டது. ஊர்வலத்தின் முன் நடன கலைஞர்கள் நடனமாடியபடி வந்தனர். பெட்போர்டு சர்க்கிள், மவுண்ட் ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை ஊர்வலம் அடைந்தது.

மழை பெய்ததால் பரவசம்

பின்னர் கோவில் வளாகத்தில் விழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காப்பு கட்டும் நிகழ்ச்சி முடிந்ததும், குன்னூரில் லேசான மழை பெய்தது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. தேர்த்திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான பூக்குண்ட திருவிழா, தேர் வடம் பிடித்தல், முத்துப்பல்லக்கு, புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற உள்ளது. அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி வரை திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்