தைப்பூச திருவிழா கொடியேற்றம்

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-02-01 18:45 GMT

வால்பாறை, 

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுவாமி புறப்பாடு

வால்பாறையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 18-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 10.30 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 7 மணிக்கு சுவாமி புறப்பாடு ஆகிய வழிபாடுகள் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, மதியம் 2 மணிக்கு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் திருமண சீர் வரிசைகள் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

திருக்கல்யாணம்

தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வருகிற 5-ந் தேதி காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலம், காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து கொடிமுடி தீர்த்தம் கொண்டு வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பின்னர் 11 மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறுகிறது.

இதையடுத்து மாலை 5 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வால்பாறையில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வானவேடிக்கையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தைப்பூச விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்