சமூக மாற்றத்துக்காக தொடர்ந்து போராடிய 'தகைசால் தமிழர்'
இந்தி திணிப்பை எதிர்த்து ராஜாஜிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் சங்கரய்யா.;
கொள்கைப்பிடிப்பு, எளிய வாழ்க்கை, பொது வாழ்வில் தூய்மை ஆகியவற்றால் கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரையும் வசீகரித்த தலைவர் தியாகி என்.சங்கரய்யா. இந்திய அரசியலில் மூத்த தலைவராக வலம் வந்த சங்கரய்யா, தனது 102வது வயதில் நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிறந்தவர் சங்கரய்யா. மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது பரிமேலழகர் தமிழ் மன்றத்தின் செயலாளராக இருந்து, தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றியவர். இந்தி திணிப்பை எதிர்த்து ராஜாஜிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். நாட்டின் சுதந்திரத்துக்காகவும், சுதந்திரமடைந்த பின்னர் மக்கள் நல்வாழ்வுக்காகவும், சமூக மாற்றத்துக்காகவும் தொடர்ந்து போராடிய தலைவர் அவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவானபோது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர்.
1938 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் அமைக்கப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல் மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எம்.எல்.ஏ.வாக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து 1967-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977, 1980-ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாதிக்கலவரங்கள், மத கலவரங்களின்போது அமைதியை உருவாக்க களப் பணியாற்றினார். 1998-ல் கோவையில் மதநல்லிணக்க பேரணியை நடத்தினார்.
தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் பெரும் பங்காற்றிய தியாகி சங்கரய்யாவுக்கு 2021ஆம் ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டது.