பழனி முருகன் கோவிலில் ரோப் காரில் புதிய பெட்டிகளை பொருத்தி சோதனை ஓட்டம்

பழனி முருகன் கோவிலில் ரோப் காரில் புதிய பெட்டிகளை பொருத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-17 16:46 GMT

பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் சேவை உள்ளது. கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் சென்று வருவதற்கு தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி ரோப்கார் நிலையத்துக்கு புதிதாக 10 பெட்டிகள் வாங்கப்பட்டன.

ரோப்காரில் உள்ள பழைய பெட்டிகளை அகற்றப்பட்டு, புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அவற்றை பொருத்துவதில் சிக்கல் இருந்ததால், அவற்றில் சில மாற்றம் செய்து பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய பெட்டிகள் பழனிக்கு கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் நேற்று ரோப்காரில் உள்ள 8 பெட்டிகளில், 2 பெட்டிகளை கழற்றி புதிதாக 2 பெட்டிகளை பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதாவது மேல்நோக்கி செல்ல ஒரு பெட்டியும், கீழ்நோக்கி வருவதற்கு ஒரு பெட்டியும் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.

இது வெற்றி பெற்றதையடுத்து, பக்தர்களின் பயன்பாட்டுக்காக மதியத்துக்கு பிறகு அந்தப்பெட்டிகள் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து புதிய பெட்டிகளும் பொருத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்