கவர்னர் பங்கேற்கும் விழா அரங்கில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்கிறார். இதைெயாட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்கிறார். இதைெயாட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 33-வது பட்டமளிப்பு விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளது. விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் படித்த 5 ஆயிரத்து 34 மாணவர்களுக்கும், இணைப்பு கல்லூரிகளில் படித்த 47 ஆயிரத்து 198 மாணவர்களுக்கும், இணைவுக்கல்வி திட்டத்தின் கீழ் படித்த 8 ஆயிரத்து 706 மாணவர்களுக்கும் தொடர்நிலை கல்வி இயக்கத்தின் வாயிலாக படித்த 48 ஆயிரத்து 26மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படுகிறது. இதில் நேரடியாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 1,124 மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.
விழாவில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு தொழில் முனைவோர் மந்திரி தர்மேந்திரபிரதான், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சரும், அழகப்பா பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இந்த பட்ட மளிப்பு விழா இன்று மதியம் 12 மணி முதல் மதியம் 2.20 மணி வரை நடக்கிறது. முன்னதாக திருச்சியில் இருந்து கார் மூலம் காரைக்குடி வரும் கவர்னர் அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு
அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து மதியம் பட்டமளிப்பு விழா அரங்கிற்கு வந்து மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் அழகப்பா அருங்காட்சியகம், அழகப்பா அறிவியல் வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
இதற்கிடையே பட்டமளிப்பு விழா அரங்கம் மற்றும் அழகப்பா அறிவியல் வளாகம், அருங்காட்சியகம் ஆகிய பகுதியில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, காரைக்குடி கூடுதல் துணை சூப்பிரண்டு ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் சிவகங்கை மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், கவர்னர் பங்கேற்கும் இடங்களில் தீவிரமாக மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். மேலும் கவர்னர் கார் மூலம் செல்லும் சாலைகளில் இருந்த வேகத்தடைகள் முற்றிலும் அகற்றப்பட்டன. அவர் வரும் வழியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.