பா.ம.க. நிர்வாகி தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை

நாமகிரிப்பேட்டை அருகே பா.ம.க. நிர்வாகியின் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

Update: 2023-01-05 18:45 GMT

ராசிபுரம்

பா.ம.க. ஒன்றிய செயலாளர்

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இ.கே.பெரியசாமி. இவர் நாமகிரிப்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவராகவும், பா.ம.க. செயலாளராகவும் இருந்து வருகிறார். தொழில்அதிபராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமாக திம்மநாயக்கன்பட்டி அருகே கோலியஸ் மூலிகை கிழங்கு தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கோலியஸ் கிழங்கு பவுடரை பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து வருகிறார். இந்த மூலிகை பவுடர் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள அந்த நிறுவனத்தில் வருமானத்துறையினர் சோதனை நடத்தியதாக தெரிகிறது.

தொழிற்சாலையில் சோதனை

இந்தநிலையில் அந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய இ.கே.பெரியசாமிக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு கர்நாடக மாநிலம் மற்றும் சேலத்தில் இருந்து வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை திடீரென்று வந்தனர். அப்போது அங்கு தொழிற்சாலையின் பாதுகாவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இதையடுத்து வருமான வரித்துறையினர் ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் உள்ள இ.கே.பெரியசாமியின் வீட்டுக்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு தொழிற்சாலைக்கு மீண்டும் வந்தனர்.

காலை 8 மணி முதல் வருமான வரித்துறையினர் சேலம் வருமான வரித்துறை உதவி கமிஷனர் ராஜாராம் தலைமையில் கோலியஸ் மூலிகை கிழங்கு தொழிற்சாலை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் உள்ள அந்த நிறுவனத்திற்கும் கோலியஸ் மூலிகை பவுடர் தயாரிக்கும் இ.கே.பெரியசாமியின் நிறுவனத்திற்கும், வியாபாரம் ரீதியாக உள்ள கணக்குகளை சோதனையிட்டனர்.

பா.ம.க. நிர்வாகியின் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதையடுத்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வடிவேலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்்கு திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்