செங்கோட்டை அருகே பயங்கரம்; பாட்டி- பேரன் அடித்துக் கொலை

செங்கோட்டை அருகே பாட்டி-பேரன் அடித்துக்கொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-07-11 17:38 GMT

கடையநல்லூர்:

செங்கோட்டை அருகே பாட்டி-பேரன் அடித்துக்கொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கூலி தொழிலாளி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் அருகே மேக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்கனி. இவருடைய மனைவி ஜைத்தூன் பீவி (வயது 70).

இவர்களுடைய மூத்த மகன் முகம்மது கனி. இவருக்கு 3 மகன்கள் உண்டு. இளைய மகன் காசிர் அலி (26), கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

குடும்ப தகராறு

இவருக்கும், தென்காசியைச் சேர்ந்த அசன் பீவிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் மேக்கரை- அணைக்கட்டு ரோடு பகுதியில் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது பக்கத்து வீட்டில் பாட்டி ஜைத்தூன் பீவியும் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் காசிர் அலி குடும்பத்தினருடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடினார். அப்போது கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்ட மனைவி அசன் பீவி, தென்காசியில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார்.

இரட்டைக்கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் முகம்மது கனி மேக்கரை-அணைக்கட்டு ரோட்டில் உள்ள மகன் காசிர் அலி வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வீட்டுக்குள் காசிர் அலி அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகைக்கு சென்று பார்த்தபோது, அங்கு முகமது கனியின் தாயார் ஜைத்தூன் பீவியும் அடித்துக்கொலை செய்யப்பட்டு மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் நிர்வாணமாக கிடந்தார். தாயாரும், மகனும் கொலை செய்யப்பட்டதால் முகம்மது கனி கதறி அழுதார். இரட்டைக்கொலை நடந்த வீட்டு வளாகத்தில் 2 கோழிகளும் இறந்து கிடந்தன.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அச்சன்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், தென்காசி துணை சூப்பிரண்டு மணிமாறன், அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இரட்டைக்கொலை நடந்த இடத்தில் பதிவான தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசாரின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது இரட்டைக்கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

உறவினர்கள், நண்பர்களிடம்...

கொலை செய்யப்பட்ட பாட்டி, பேரன் ஆகியோரது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாட்டியையும், பேரனையும் கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும், இரட்டைக்கொலை நடந்த வீடு, தோட்டத்தில் தனியாக இருந்ததால் இந்த பயங்கர சம்பவம் குறித்து உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. காசிர் அலி மனைவி அசன்பீவி குடும்பத்தினரிடமும், காசிர் அலியின் நண்பர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கோட்டை அருகே பாட்டி-பேரன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்