வியாசர்பாடியில் பயங்கரம்: வீட்டில் தனியாக வசித்த முதியவர் அடித்துக்கொலை - நகை, செல்போன் கொள்ளை

வியாசர்பாடியில் வீட்டில் தனியாக வசித்த முதியவரை அடித்துக்கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.;

Update: 2022-12-30 14:39 GMT

சென்னை வியாசர்பாடி மேக்சின்புரத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 73). ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி ராதா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவர்களுடைய மகன் ராஜா. இவர், ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ராஜா, எம்.கே.பி.நகரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பன்னீர்செல்வம் மட்டும் தனியாக இந்த வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில் ராஜா, தனது மனைவி, குழந்தைகளுடன் காரைக்குடியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில் தந்தையிடம் இருந்து 2 நாட்களாக செல்போன் அழைப்பு வராததால் சந்தேகம் அடைந்த ராஜா, தனது தந்தைக்கு போன் செய்தார். அப்போது அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ராஜா, காரைக்குடியில் இருந்து நேற்று காலை சென்னை வந்தார். பின்னர் வியாசர்பாடியில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது தந்தை பன்னீர்செல்வம் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவரது தலையிலும், கழுத்திலும் காயம் இருந்தது. இதுபற்றி ராஜா கொடுத்த புகாரின்பேரில் வியாசர்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பன்னீர்செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, விலை உயர்ந்த செல்போன், கைகடிகாரம், வீட்டில் சேமித்து வைத்திருந்த சுமார் ரூ.1 லட்சத்துக்கும் மேலான பணம் மற்றும் நகைகள் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது.

எனவே வீட்டில் தனியாக இருந்த முதியவர் பன்னீர்செல்வத்தை மர்மநபர்கள் அடித்துக்கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொலையான பன்னீர்செல்வத்துக்கு, சொந்தமாக வியாசர்பாடி, தங்கசாலை, எம்.கே.பி. நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் 4 வீடுகளும், கடைகளும் உள்ளன. இதில் ஒரு வீட்டில் அவரும், மற்றொரு வீட்டில் மகன் ராஜாவும் வசித்து வருகிறார்கள். மீதம் உள்ள 2 வீடுகள் மற்றும் கடைகளை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பன்னீர்செல்வம் தனியாக வசித்து வந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு மோப்பநாய் கரிகாலன் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்ற நாய், நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்