ஈரோட்டில் பயங்கரம்டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

ஈரோட்டில் டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டாா்.

Update: 2023-05-30 20:51 GMT

ஈரோட்டில் டாஸ்மாக் கடையின் முன்பு வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகரை சேர்ந்தவர் அம்பேத்கர். இவருடயை மகன் சந்தோஷ் (வயது 29). இவர் ஈரோடு கனிராவுத்தர்குளம் காந்திநகர்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக நேற்று சென்றார். மது வாங்கிய அவர் அங்குள்ள பாரில் அமர்ந்து குடித்துவிட்டு வெளியில் வந்தார். அப்போது டாஸ்மாக் மதுக்கடை முன்பு அவரை 5 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்து தகராறில் ஈடுபட்டது.

சந்தோஷிடம் அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தையில் பேசினர். இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷின் வயிற்றில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அந்த கும்பல் அங்கிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றது. இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனா். அவர்கள் உடனடியாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

முன்விரோதம்

தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஈரோடு பி.பி.அக்ரஹாரத்தை சேர்ந்த ஜின்னா (30) என்பவருக்கும், சந்தோசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், ஜின்னா உள்பட 5 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்யப்பட்ட சந்தோஷின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு கொலையாளிகளின் முகம் பதிவாகி இருக்கிறதா? அவர்கள் எந்த வழியாக தப்பி சென்றனர்? என்று போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளனர்.

வழிப்பறி வழக்கு

கொலை செய்யப்பட்ட சந்தோஷ் மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொலை முயற்சி ஆகிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. சந்தோஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து உள்ளார். ஈரோட்டில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்