கூடலூரில் பயங்கரம்:ஊர்க்காவல்படை வீரர் வெட்டிக்கொலை:பிறந்த நாளில் தீர்த்து கட்டிய நண்பர் கைது

கூடலூரில், ஊர்க்காவல்படை வீரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பிறந்த நாளில் தீர்த்து கட்டிய அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-19 18:45 GMT

ஊர்க்காவல்படை வீரர்

கூடலூர் ராஜீவ் காந்திநகர் முத்தையர் தெருவை சேர்ந்தவர் அய்யனார். அவருடைய மகன் நாகேந்திரன் (வயது 27). ஊர்க்காவல் படை வீரர். அவருடைய மனைவி தேவகனி (24). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் 2 பேரும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கூடலூர் புதூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (25). மலேசியாவில் வேலை பார்த்த இவர், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து கூலி வேலை செய்து வந்தார். நாகேந்திரனும், பிரகாசும் நண்பர்கள்.

கடந்த ஆண்டு பிரகாஷ், நாகேந்திரனுக்கு சொந்தமான மடிக்கணினி, பென் டிரைவை வாங்கி சென்றார். ஆனால் அதனை அவர் திரும்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிரகாஷ், மடிக்கணினி, பென் டிரைவை நாகேந்திரனிடம் திருப்பி கொடுத்ததாக தெரிகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்தநிலையில் நாகேந்திரனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை பிரகாசின் அண்ணன் பிரசாந்த் என்பவர் இரவல் வாங்கி சென்றார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிளை சரி செய்து தரும்படி நாகேந்திரன் கேட்டார். இதனால் நாகேந்திரன், பிரகாஷ் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் நாகேந்திரனுக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் தனது மனைவி தேவகனியுடன் நாகேந்திரன் கம்பத்துக்கு சென்று புத்தாடைகளை வாங்கினார். பின்னர் அவர்கள் 2 பேரும், இரவு 10.45 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தனர்.

அதன்பிறகு நாகேந்திரன் தனது வீட்டில் நண்பர்கள் மணிகண்டன், அனந்து, சாந்தகுமார் ஆகியோருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். சிறிதுநேரத்தில் நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். கணவன், மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.

வெட்டிக்கொலை

அந்த சமயத்தில் பிரகாஷ், நாகேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வெளியே வருமாறு கூறினார். இதனால் வீட்டில் இருந்து வெளியே வந்த அவரிடம், பிரகாஷ் தரக்குறைவாக பேசி தகராறில் ஈடுபட்டார்.

மேலும் பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நாகேந்திரனின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில், ரத்த வெள்ளத்தில் நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அங்கிருந்து பிரகாஷ் தப்பி ஓடி விட்டார்.

இதற்கிடையே தெருவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த தேவகனி, தனது கணவர் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார்.

தொழிலாளி கைது

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் நாகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரகாசை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் சரண் அடைந்தார். அவா் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

பரபரப்பு வாக்குமூலம்

போலீசில் பிரகாஷ் அளித்த வாக்குமூலத்தில், நாகேந்திரனின் மோட்டார் சைக்கிளை எனது அண்ணன் எடுத்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் சேதமானது. இதனால் நாகேந்திரன் என்னிடம் சேதமடைந்த மோட்டார் சைக்கிளை சரி செய்து தருமாறு கேட்டார். ஆனால் நான் சரி செய்து கொடுக்கவில்லை. அதன்பிறகு என்னை பார்க்கும் போதெல்லாம் மோட்டார் சைக்கிளை சரி செய்து தருமாறு அவர் கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக நேற்று முன்தினம் நாகேந்திரன் வீட்டிற்கு சென்றேன். பின்னர் அவருக்கு போன் செய்து வீட்டிற்கு வெளியே வரவழைத்து வெட்டிக்கொலை செய்தேன் என்று கூறினார். பிறந்தநாளன்று ஊர்க்காவல்படை வீரர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்