சென்னையில் பயங்கரம்; விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகொலை
சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்தவர்கள், அவரை வெட்டி சாய்த்து வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.;
சென்னை,
சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி, அம்பேத்கர் குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. மனைவி, 2 குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.
நேற்று காலை 8 மணி அளவில் பாரதிதாசன் காலனி, பி.எஸ்.என்.எல். நிறுவனம் அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு நின்றார். அப்போது மின்னல் வேகத்தில் கார் ஒன்று அங்கு வந்து நின்றது.
வெட்டிக்கொலை
அந்த காரில் இருந்து சிலர் கையில் அரிவாளுடன் இறங்கினார்கள். அவர்கள் அதிரடியாக ரமேசை தாக்கினார்கள். அவரை பின்பக்கமாக தலை, கழுத்து ஆகிய இடங்களை குறிவைத்து அரிவாளால் வெட்டினார்கள். ரமேஷ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரால் தப்பித்தும் ஓடமுடியவில்லை.
அரிவாள் வெட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கீழே சாய்ந்தார். காரில் வந்தவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ரமேசை வெட்டி சாய்த்து விட்டு, மீண்டும் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர். உடனே அந்த பகுதி பெரும் பரபரப்பானது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், அசோக்நகர் உதவி கமிஷனர் தனசெல்வன் தலைமையில் போலீஸ் படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
ரியல் எஸ்டேட் பகை
ரமேசின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ் துடிக்க, துடிக்க வெட்டிக்கொல்லப்பட்ட காட்சி, அந்த பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
ரமேசை தீர்த்துக்கட்டியவர்களில் ஒருவர், அவரது பழைய நண்பர் என்று தெரியவந்தது. அவரும் வி.சி.க. கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பகை மற்றும் தனிப்பட்ட பகை காரணமாக ரமேஷ் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ரமேசின் பழைய நண்பர் ராகேஷ் உள்ளிட்ட 6 பேர்களை பிடித்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.