திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-07-18 19:26 GMT

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

குப்பை கிடங்கு

திருச்சி அரியமங்கலம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் பல ஆண்டுகளாக இங்கு கொட்டப்பட்டு வந்தது. இதனால் அரியமங்கலம் குப்பை கிடங்கில் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடந்து வந்தது.

ஆனால் தற்போது அரியமங்கலம் குப்பை கிடங்கை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் வந்தன. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு அதில் இருந்து வெளியேறி வரும் புகைமூட்டத்தால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். சுவாசகோளாறு, உடல் உபாதைகள் ஏற்பட்டது. அங்கு தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு மேலாக குப்பைகள் எரிந்த நிகழ்வும் அரங்கேறி உள்ளது. இதனால் அரியமங்கலம் குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

நுண்உரம் செயலாக்க மையம்

இதனை தொடர்ந்து மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டுகளிலும் நுண்உரம் செயலாக்க மையம் தொடங்கப்பட்டு, அந்தந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கு கொண்டு செல்லப்பட்டு உரமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அரியமங்கலம் குப்பை கிடங்கிலும் ஆண்டுக்கணக்கில் மலைபோல் தேங்கி கிடந்த குப்பைகள் ரூ.80 கோடியில் தனியார் மையங்கள் மூலம் மறுசுழற்சி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

உரம் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ரப்பர் போன்ற பயன்படுத்த முடியாத குப்பைகளை திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் சிமெண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரியமங்கலம் குப்பை கிடங்கில் தேங்கி கிடந்த குப்பைகள் பெருமளவு குறைந்துவிட்டன. இன்னும் ஓராண்டுக்குள் அனைத்து குப்பைகளும் காலியாகி விடும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

திடீர் தீ

இந்நிலையில் அரியமங்கலம் குப்பை கிடங்கில் நேற்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் அதில் இருந்து கிளம்பிய புகை அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன், நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகள் சென்று குப்பை கிடங்கில் பற்றிய தீயை அணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு 3 தீயணைப்பு வாகனங்களும், 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தண்ணீர் டேங்கர் லாரிகளும் சென்று, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அரியமங்கலம் குப்பை கிடங்கில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு குப்பைகள் எரிந்து வருவதால் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மற்றும் அரியமங்கலம் எஸ்.ஐ.டி, யில் இருந்து மேலகல்கண்டார் கோட்டை செல்லும் சாலையில் புகை மூட்டங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முக கவசம் அணிந்து சென்று வருகிறார்கள்.

காரணம் என்ன? போலீசார் விசாரணை

அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மாநகராட்சியின் தீவிர நடவடிக்கையால் கடந்த 3 ஆண்டுகளாக தீ விபத்துகள் பெரிய அளவில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் மர்ம நபர்கள் யாரேனும் ஈடுபட்டு இருக்கக்கூடும் என தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்