குற்றாலத்தில் பயங்கர தீ; 50 கடைகள் எரிந்து நாசம்
குற்றாலத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து நாசமாகின. சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
குற்றாலத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து நாசமாகின. சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்காலிக கடைகள்
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு தென்புறத்தில் இருந்து மெயின் அருவி வரையிலும் சுமார் 50 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் ஓட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள், பிளாஸ்டிக், பேன்சி பொருட்கள் விற்பனை கடைகள் போன்றவை செயல்பட்டன.
நேற்று மதியம் தற்காலிக கடைகளின் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்து பறந்த தீப்பொறியானது அருகில் இருந்த கடையில் விழுந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் கடை முழுவதும் மளமளவென்று தீப்பிடித்து எரிந்தது. மேலும் அருகில் உள்ள மற்ற கடைகளுக்கும் தீ வேகமாக பரவியது.
சிலிண்டர்கள் வெடித்தன
இதனால் அங்கிருந்த கடைக்காரர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் அலறியடித்தவாறு ஓடினர். சிறிதுநேரத்தில் அங்குள்ள டீக்கடைகள், ஓட்டல்களில் இருந்த சுமார் 4 கியாஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சுரண்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள், கடைகளின் நாலாபுறமும் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.2 கோடி பொருட்கள் சேதம்
சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் சுமார் 50 கடைகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து தீக்கிரையானது. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்குள்ளான கடைகளை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ''குற்றாலத்தில் சீசனுக்காக அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கடைகள் தீ விபத்தில் சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாதவாறு தகுந்த முன்னேற்பாடு செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
தீ விபத்து குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் சேதமடைந்த கடைகளை தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, பழனிநாடார், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் பார்வையிட்டனர். குற்றாலம் அருவிகளில் மிகவும் குறைவான அளவே தண்ணீர் விழுவதால் குறைந்த சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். இதனால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.