திண்டுக்கல்லில் பட்டாசு கடையில் பயங்கர வெடிவிபத்து; டிரைவர் உடல் கருகி பலி

திண்டுக்கல்லில் வேனில் இருந்து கடைக்கு எடுத்துச்சென்ற போது, பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் டிரைவர் உடல் கருகி பலியானார். பக்கத்து வீட்டினர் அலறியடித்தபடி ஓடினர்.

Update: 2022-06-22 16:04 GMT

வேனில் இருந்து கடைக்கு எடுத்துச்சென்ற போது, பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் டிரைவர் உடல் கருகி பலியானார். பக்கத்து வீட்டினர் அலறியடித்தபடி ஓடினர்.

பட்டாசு கடை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே சென்னமநாயக்கன்பட்டி அருணாச்சலம் நகரில் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. திண்டுக்கல்லை அடுத்த சுக்காம்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், அவருடைய மனைவி பாலசரஸ்வதி பெயரில் உரிமம் எடுத்து இந்த பட்டாசு கடையை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் 2.20 மணி அளவில் இந்த பட்டாசு கடைக்கு, சுக்காம்பட்டியில் இருந்து ஒரு வேனில் பட்டாசு பண்டல்கள் கொண்டுவரப்பட்டது. வேனை அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ராஜேஷ்குமார் (வயது 40) ஓட்டி வந்தார். பட்டாசு கடை முன்பு வேனை நிறுத்திய அவர், வேனில் இருந்த பட்டாசு பண்டல்களை கடைக்குள் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

தீயில் கருகி டிரைவர் பலி

அப்போது எதிர்பாராதவிதமாக வேனில் இருந்த பட்டாசுகளில் தீப்பற்றியது. இதில் பட்டாசுகள் வெடிக்கத்தொடங்கின. அப்போது வேனில் இருந்து தெறித்த தீப்பொறிகள் பட்டாசு கடைக்குள் விழுந்தது. இதனால் கடைக்குள் இருந்த பட்டாசுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன.

அப்போது கடைக்குள் இருந்த 2 ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடினர். இதற்கிடையே பட்டாசு பண்டல்களை தலையில் சுமந்தபடி வந்த ராஜேஷ்குமார் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடி பட்டாசு கடை முன்பு நின்றார். அப்போது அவர் வைத்திருந்த பட்டாசு பண்டல்களிலும் தீப்பொறி பட்டு அவை வெடித்து சிதறின.

இதனால் அவரால் அங்கிருந்து தப்பி ஓட முடியாமல் நிலை தடுமாறி வேன் அருகிலேயே விழுந்தார். அவர் தலையில் சுமந்தபடி வந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீப்பொறியால் அவர் உடல் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. சிறிது நேரத்தில் அவர் தீயில் கருகி பலியானார்.

வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்

இதற்கிடையே கடையில் இருந்த பட்டாசுகள், வேனில் இருந்த பட்டாசுகள் தொடர்ச்சியாக பயங்கர சத்தத்துடன் வெடிக்கத்தொடங்கின. இந்த வெடி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்தபடி தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு ஓடினர்.

பட்டாசு கடை எதிரே ஒரு ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் சிலர் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். கடையில் பட்டாசு வெடித்து சிதறியதை கண்டு உணவு முக்கியம் அல்ல, உயிர் தான் முக்கியம் என்று கருதிய அவர்கள் அலறியடித்தப்படி ஓட்டலை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.

கடையில் பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறிகள் நாலாபுறமும் சிதறின. இதில் பட்டாசு கடையின் எதிரே இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீதும் தீப்பற்றியது. இதற்கிடையே அங்கு வந்த தாடிக்கொம்பு போலீசார், தண்ணீரை ஊற்றி அந்த மோட்டார் சைக்கிள் முழுமையாக எரியாமல் தடுத்தனர்.

புகை மூட்டம்

பட்டாசு கடையில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. கடை முன்பு பட்டாசு பண்டல்களுடன் நிறுத்தப்பட்டிருந்த வேன், அதன் அருகே இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை தீயில் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது.

இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திண்டுக்கல், ஆத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன.

பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜூ தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து பட்டாசு கடையில் பற்றிய தீயை அணைக்க போராடினர். சிறிது நேரத்தில் வேன், மோட்டார் சைக்கிளில் பற்றிய தீயும் அணைக்கப்பட்டது.

உடல் மீட்பு

பட்டாசு கடைக்குள்ளும் ஓரளவு தீ அணைக்கப்பட்ட நிலையில் திடீரென மீண்டும் பட்டாசுகள் வெடித்தன. இதனால் பதற்றமடைந்த தீயணைப்பு வீரர்கள் பட்டாசு கடையைவிட்டு சற்று தள்ளிச்சென்றனர். பின்னர் அங்கிருந்து கடைக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 1½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு பட்டாசு கடைக்குள் பற்றிய தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

பின்னர் இறந்த டிரைவரின் உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலெக்டர் ஆய்வு

முன்னதாக கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஆர்.டி.ஓ. பிரேம்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

தீயில் கருகி பலியான ராஜேஷ்குமாருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

பட்டாசு கடைக்கு அனுமதி கிடைத்தது எப்படி? பொதுமக்கள் கேள்வி

விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 2018-ம் ஆண்டு இதே பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு பெண் பலியானார். அப்போது அந்த இடத்தில் குடியிருப்புகள் அவ்வளவாக இல்லை. இருந்த போதிலும் பட்டாசு கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது பட்டாசு கடையை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டிருந்தால் வீடுகளிலும் தீப்பற்றி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். குடியிருப்புகள் இருக்கும் இடத்தில் பட்டாசு கடை நடத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று தெரியவில்லை என்றனர்.

மின் இணைப்பு துண்டிப்பு

பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவலறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் மின் இணைப்பை உடனடியாக துண்டித்தனர். இதனால் பட்டாசு கடையில் உள்ள மின் இணைப்பு மூலம் மற்ற இடங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. ஒருவேளை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்காவிட்டால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்