தாசில்தார், டிரைவர் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான தாசில்தார் மற்றும் டிரைவர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-02-15 17:41 GMT

ரூ.15 ஆயிரம் லஞ்சம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் செய்யானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 43). இவரின் உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் மாங்காடு பகுதியை சேர்ந்த லோகபிள்ளை என்பவருடைய வாரிசுதாரர்களுக்கு சொந்தமான 51 சென்ட் நிலம் அரசு ஆவணத்தில் புறம்போக்கு நிலமாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது.

அதனை ரத்து செய்து தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என்று கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந் தேதி அந்த நிலத்தை லோகபிள்ளையின் வாரிசு தாரர்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொடுக்க அப்போதைய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நில அளவையர், வருவாய் துறையினர் நிலத்தை அளவீடு செய்துள்ளனர். தொடர்ந்து பட்டா மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஆற்காடு தாசில்தார் சுரேஷ் ரூ.25 ஆயிரம் லஞ்சம் பேசி, இறுதியில் ரூ.15,000 கேட்டுள்ளார்.

பணியிடை நீக்கம்

இதுகுறித்து சகாதேவன் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரூ.15 ஆயிரத்தை ஜீப் டிரைவர் பார்த்திபனிடம் கொடுத்தபோது அவரையும், தாசில்தாரையும் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை செய்து கைது செய்தனர்.

கைதான இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிபதி முன் ஆஜர் படுத்தி இருவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் நேற்று ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள தாசில்தார் சுரேஷின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கைதான தாசில்தார் சுரேஷ், டிரைவர் பார்த்திபன் ஆகிய இருவரையும் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்