மஞ்சள் சாகுபடியில் மகிழும் விவசாயிகள்

குடிமங்கலம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்யும் வகையில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர்.

Update: 2022-12-10 19:30 GMT


குடிமங்கலம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்யும் வகையில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர்.

மஞ்சள் கிழங்கு

மங்கலப் பொருட்களில் முதல் இடம் பிடிப்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் மஞ்சள் ஆகும். மஞ்சளை உருட்டி வைத்து அருகம்புல்லை செருகி வைத்தால் அது வழிபாட்டுக்குகந்த பிள்ளையாராக மாறி விடுகிறது. மஞ்சள் பூசிய கயிற்றில் மஞ்சள் கிழங்கை கட்டி வைத்து மங்கையின் கழுத்தில் அணிந்து விட்டால் அது மங்கல நாண் எனப்படும் தாலிக் கயிறாக மாறி பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கி விடுகிறது. சுமங்கலிகள் வீட்டுக்கு வந்தால் அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுக்கும் பழக்கம் இன்றளவும் உள்ளது.

பூப்பெய்திய பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டு விழா என்னும் மஞ்சள் நீரில் குளிப்பாட்டும் நிகழ்வு முக்கியமானதாக உள்ளது. மேலும் திருமண விழாக்களில் 'மஞ்சள் இடித்தல்' என்னும் சடங்கு முக்கிய இடம் பிடிக்கிறது. திருமண அழைப்பிதழில் மஞ்சள் பூசுவது தொடங்கி, புத்தாடைகளில் மஞ்சள் தடவுதல் என ஒவ்வொன்றிலும் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு.

மணமக்களை வாழ்த்தும் ஒவ்வொருவரும் மஞ்சளில் குளித்த அரிசியை அட்சதையாக தூவி மணமக்களை வாழ்த்துவார்கள். இப்படி மங்கலப் பொருளாக பயன்படுத்தப்படும் மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுவதால் பாட்டி வைத்தியத்தில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு. அதுமட்டுமா! தென்னிந்திய சமையலில் சிறப்பிடம் பெற்றுள்ள மஞ்சள் அழகு சாதனப்பொருட்களின் உற்பத்தியிலும், சாயமேற்றுதலிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

மங்கலப்பொருள்

எல்லாவற்றுக்கும் மேலாக அறுவடைதிருநாளான பொங்கல் பண்டிகையின் போது விளைந்தும் விளையாத நிலையிலுள்ள பச்சை மஞ்சளை செடியுடன் கொத்தாக பொங்கல் பானையில் கட்டும் பழக்கம் உள்ளது. இதனாலேயே பொங்கல் பண்டிகையின் போது செங்கரும்புக்கு இணையான இடத்தை மஞ்சள் கொத்து பிடிக்கிறது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் கொத்து விற்பனை செய்யும் வகையில் மஞ்சள் சாகுபடியில் குடிமங்கலம் பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

'விவசாயம் என்பது உணவு உற்பத்தி சார்ந்த தொழிலாக இருப்பதால் விவசாயிகள் போதிய லாபம் கிடைக்காத நிலையிலும் மன நிறைவுடன் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். அதுபோல் பொங்கலன்று முக்கிய இடம் பிடிக்கும் மங்கலப் பொருளான மஞ்சள் கொத்து சாகுபடியும் விவசாயிகளுக்கு மன நிறைவைத் தருகிறது. பெரும்பாலும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொங்கல் பண்டிகையின் போது விற்பனைக்காக உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளின் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக மஞ்சள் சாகுபடியை மேற்கொண்டுள்ளோம். உணவுக்காகவோ மற்ற பயன்பாட்டுக்காகவோ மஞ்சள் உற்பத்தி செய்யும்போது சுமார் 9 மாதங்களில் அறுவடை செய்ய வேண்டும். அதேநேரத்தில் பொங்கலுக்கு மஞ்சள் கொத்து உற்பத்தி செய்வதற்காக ஆடிப்பட்டத்தில் சாகுபடி மேற்கொண்டால் மார்கழி கடைசியில் அறுவடை செய்து விடலாம். வியாபாரிகள் நேரடியாக விளைநிலத்துக்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். மனதுக்கு மகிழ்ச்சி தரும் அதேநேரத்தில் நல்ல வருவாயும் தரக்கூடியதாக மஞ்சள் சாகுபடி உள்ளது'.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்