வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை

கொரடாச்சேரி அருகே வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை செய்யப்பட்டார். தனது மனைவியுடன் கள்ளக்காதல் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மைத்துனரையும் போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-10-25 00:45 IST

கொரடாச்சேரி;

கொரடாச்சேரி அருகே வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை செய்யப்பட்டார். தனது மனைவியுடன் கள்ளக்காதல் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மைத்துனரையும் போலீசார் கைது செய்தனர்.

இளநீர் வியாபாரி

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள எருக்காட்டூரை அடுத்த நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜா(வயது 50). இவர், திருவாரூரில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.இதே ஊரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வீரமணி(40). இவர் தனது மனைவிக்கும், இளநீர் வியாபாரி ராஜாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார்.

வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி கொலை

இது தொடர்பாக ராஜாவுக்கும், வீரமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜா மது குடித்து விட்டு எருக்காட்டூர் வாய்க்கால் மதகு அருகில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு தனது மைத்துனர் சரவணனுடன்(30) வந்த வீரமணி ராஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஏற்கனவே ராஜா மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த வீரமணி தனது மைத்துனர் சரவணனுடன் சேர்ந்து அருகில் இருந்த வாய்க்காலில் ராஜாவை தள்ளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து ராஜாவின் உடலை வாய்க்கால் மதகின் உள்ளே அடைத்து வைத்து விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டனர்.

மதகில் இருந்த உடல்

இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியில் சென்ற ராஜா வீட்டுக்கு திரும்பி வராததால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இ்டங்களிலும் அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் எருக்காட்டூர் வாய்க்கால் மதகின் உட்புறம் ஒருவரது உடல் இருப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் இது குறித்து கொரடாச்சோி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

போலீஸ் விசாரணையில் அம்பலம்

விசாரணையில் வாய்க்கால் மதகில் பிணமாக இருந்தவர் கொரடாச்சேரி அருகே உள்ள நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்த இளநீர் வியாபாரி ராஜா என்றும் அவர் தண்ணீரில் அமுக்கி கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

2 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் வீரமணி மற்றும் அவரது மைத்துனர் சரவணன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ராஜாவை கொலை செய்ததுதெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொலை செய்யப்பட்ட ராஜாவுக்கு விசாலாட்சி என்ற மனைவியும், விஜய், விமல் ஆகிய 2 மகன்களும், வினிதா என்ற மகளும்உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்