வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று பாலம் விரிவாக்க பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
அம்பையில் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று பாலம் விரிவாக்க பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அம்பை:
அம்பை மெயின் ரோட்டில் சாலை விரிவாக்கத்திற்காக அம்பை கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள நதியுன்னி கால்வாயில் ஒரு பாலம் இடிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் முக்கூடல் சாலையில் தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள கால்வாய் பாலமும் இடித்து விரிவாக்கம் செய்ய இருந்தது. இந்நிலையில் அம்பை பகுதியில் பாலம் இடித்த ஒரே நாளில் போக்குவரத்துக்கு பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில் தொடர்ந்து மற்றொரு பாலமும் இடித்தால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகுந்த சிரமமாக இருக்கும் எனவும், ஒரு பாலம் வேலை முடிந்தவுடன் மறு பாலத்தின் வேலையை தொடங்க வேண்டும் எனவும் வியாபாரிகள் சங்கம் சார்பில் அம்பை நெடுஞ்சாலைத்துறை உதவி என்ஜினீயரிடம் நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் பண்ணை சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் இதுபற்றி அம்பை தாசில்தார் மற்றும் அம்பை நகரசபை தலைவர் பிரபாகர பாண்டியன் ஆகியோரிடமும் கோரிக்கை வைத்தனர்.
நகரசபை தலைவர் இதுதொடர்பாக உடனடியாக நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பனிடம் தொலைபேசியில் பேசினார். அதைத்தொடர்ந்து தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மிகவும் பாதிப்பு இருப்பதால் பாலம் விரிவாக்க பணிகளை ஒன்றன்பின் ஒன்றாக செய்யலாம் என கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை துறை நிர்வாக என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் முக்கூடல் சாலையில் தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள நதியுன்னி கால்வாய் பாலம் விரிவாக்கம் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.