தற்காலிக தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
விளாப்பாக்கம் பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் சுமார் 21 பேர் தற்காலிக தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு வேலைக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும், அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்காமல் வேலை வாங்குவதாகவும் அதற்கு சரியான கூலி வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தற்காலிக தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செயல் அலுவலர் முத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.