மண்டபம், பாம்பனில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்

பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றம் எதிரொலியாக மண்டபம், பாம்பனில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-07-05 18:45 GMT

பனைக்குளம், 

பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றம் எதிரொலியாக மண்டபம், பாம்பனில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

படகு போக்குவரத்து

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றிய கடல் பகுதியில் டால்பின், ஆமை, கடல் பசு, கடல் குதிரை, கடல் பன்றி உள்ளிட்ட 3,600 வகையான அரிய கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த 21 தீவுகள் அடங்கிய மன்னார்வளைகுடா கடல் பகுதி மத்திய அரசால் தேசிய கடல் சார் பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

தீவை சுற்றியுள்ள அரிய கடல்வாழ் உயிரினங்களின் சிறப்பு மற்றும் தீவுகளின் சிறப்பு குறித்தும் சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடைதீவு வரை வனத்துறையின் மூலம் சூழல் சார்ந்த சுற்றுலா திட்டத்தின் கீழ் சுற்றுலா படகு போக்குவரத்தும் இயக்கப்பட்டு வருகின்றது. இதே போல் மண்டபம் காந்திநகர் கடற்கரையில் இருந்தும் மனோலிதீவு வரையிலும் சுற்றுலா படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகின்றது.

கடல் சீற்றம்

இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே உள்ளது. இதனால் மண்டபம் காந்திநகர் கடற்கரையில் இருந்து மனோலி தீவு வரையிலும் வனத்துறை மூலம் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டபம் கடற்கரை பூங்காவில் இருந்து பாம்பன் ரெயில் பாலம் வரையிலான கடல் பகுதியில் மண்டபம் பேரூராட்சி மூலம் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடைதீவு வரையிலும் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, பலத்த சூறாவளி காற்று வீசுவதோடு கடல் சீற்றமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குருசடைதீவு மற்றும் மனோலி தீவு வரையிலும் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்து கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் குறைந்த பின்னர் வழக்கம்போல் மீண்டும் சுற்றுலா போக்குவரத்து தொடங்கப்படும் என்றனர்.

சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதேபோல் ஏர்வாடி பிச்சைமூப்பன்வலசை கடற்கரை பகுதியில் வனத்துறை மூலம் இயக்கப்பட்டு வந்த சுற்றுலா படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்