தொடுவாய் கிராமத்தில் மழையால் தற்காலிக பாலம் சேதம்
தொடுவாய் கிராமத்தில் மழையால் தற்காலிக பாலம் சேதம் நிரந்தரமாக கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே பழையாறில் இருந்து திருமுல்லைவாசல் வரை கடலோர பகுதிகளில் கடற்கரை சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் மூலம் திருமுல்லை வாசல், தொடுவாய், கூழையார், கொட்டாய் மேடு, தாண்டவன்குளம், ஓலகொட்டாய் மேடு, மடவாமேடு, தற்காஸ், புதுப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்கள் வழியே பழையாறு துறைமுகம் வரை 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட கனமழையால் திருமுல்லைவாசல் அருகே பக்கிங்காம் கால்வாயோடு இணைக்கப்பட்ட வடிகாலுக்கான கான்கிரீட் பாலம் இடிந்து விழுந்து 15 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலையில் தற்காலிக பாலம் அமைந்துள்ளது. தற்போது பெய்த மழையால் இந்த பாலம் சேதமடைந்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தற்காலிக பாலத்தை அகற்றிவிட்டு நிரந்தரமாக கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.