மாமல்லபுரம் அருகே சாலையோரம் ஓட்டல் கழிவுகளை கொட்ட முயன்ற டெம்போ டிரைவர் கைது
மாமல்லபுரம் அருகே சாலையோரம் ஓட்டல் கழிவுகளை கொட்ட முயன்ற டெம்போ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு கடற்கரை சாலை கோவளத்தில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலின் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவை டன் கணக்கில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை கோவளத்தில் உள்ள குப்பை கிடங்கு மையத்தில் கொட்டாமல், அந்த நட்சத்திர ஓட்டல் நிர்வாகம் மூட்டை, மூட்டையாக கட்டி ஒரு மினி டெம்போவில் கொண்டு வந்து மாமல்லபுரத்தை அடுத்துள்ள பட்டிபுலம் இ.சி.ஆர். சாலையோரம் கொட்ட முயன்றனர்.
அப்போது அந்த பகுதி மக்களும், பட்டிபுலம் பஞ்சாயத்து நிர்வாகத்தினரும் தகவல் அறிந்து அங்கு கூட்டமாக விரைந்து சென்று கழிவுகளை கொட்ட வந்த டெம்போவை சிறைபிடித்தனர்.
உடனடியாக அவர்கள் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்கள் சிறைபிடித்து வைத்திருந்த டெம்போவை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று, சட்டத்திற்கு புறம்பாக குப்பைகளை எடுத்து வந்து சாலையில் வீச முயன்றதாக அந்த நட்சத்திர ஓட்டல் நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
நட்சத்திர ஓட்டலின் டெம்போ டிரைவர் பாபு (வயது 25) வை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.