குலதெய்வ வழிபாட்டிற்கு தயாராகும் கோவில்கள்
சிவராத்திரி விழாவினை முன்னிட்டு குல தெய்வ வழிபாட்டிற்காக கோவில்கள் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தாயில்பட்டி,
சிவராத்திரி விழாவினை முன்னிட்டு குல தெய்வ வழிபாட்டிற்காக கோவில்கள் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
குல தெய்வம்
நம் முன்னோர்கள் குலதெய்வ வழிபாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அதனை காலங்காலமாக நாம் பின்பற்றி வருகிறோம். குறிப்பாக திருமணத்திற்கு முதல் பத்திரிகை, பிறக்கும் குழந்தைக்கு முதல் மொட்டை, புதிய வாகனங்கள் வாங்கினால் முதலில் கோவிலுக்கு சென்று வணங்குவது, தொழில் தொடங்கினால் குலதெய்வத்திற்கு முதலிடம் என குல தெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் வசித்து வந்தாலும் அவர்கள் உறவினர்கள் திருமணம், பொங்கல் விடுமுறை, தீபாவளி விடுமுறைக்கு கூட சொந்த ஊருக்கு வராவிட்டாலும் குல தெய்வ வழிபாட்டில் தவறாது கலந்து கொள்வதை நாம் இன்றும் காணலாம்.
சிவராத்திரி விழா
வெம்பக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட நதிக்குடி ஆத்தடி கருப்பசாமி, மொட்டைய சாமி கோவில், உப்புபட்டி கோமதி அம்மன் கோவில், சிப்பிப்பாறை கோச்சடை ராமபுலி அய்யனார், நள்ளி சிங்கமுடைய அய்யனார், வெம்பக்கோட்டையில் கொத்தள முத்து, அங்காள ஈஸ்வரி அம்மன், வன பேச்சி அம்மன், பொன் இருளப்பசாமி, உத்தண்ட மாடசாமி, இ.மீனாட்சிபுரத்தில் வாழிஞ்சி அய்யனார் ஆகிய பகுதிகளில் குலதெய்வ கோவில்கள் உள்ளன.
அதேபோல அழகம்மாள் கோவில், புலிக்குத்தி கருப்பசாமி கோவில், கன்னிசேரி காட்டு பத்திரகாளியம்மன் கோவில், தாயில்பட்டியில் கழுவுடை அம்மன் கோவில், கன்னி மாரியம்மன், பேச்சி உடைய அய்யனார், விஜய கரிசல்குளத்தில் நிறைபாண்டிய அய்யனார், செவல்பட்டியில் பாம்பலம்மன், சுடலைமாடசாமி, பூசாரி நாயக்கன்பட்டி ஜக்கம்மாள் கோவில், அழகு பார்வதி அம்மன், கண்மாய்பட்டியில் தலை குடை அய்யனார், செந்தட்டியாபுரத்தில் செந்தட்டி அய்யனார் கோவில், கணஞ்சாம்பட்டி கண்ணம்மாள் கோவில் உள்பட 150-க்கும் மேற்பட்ட குலதெய்வ கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் வருகிற 18-ந் தேதி சிவராத்திரி விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவிலை சேர்ந்தவர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
பாரி வேட்டை
கோவிலில் வர்ணம் தீட்டுதல், பக்தர்களுக்கு தேவையான தண்ணீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக கோவிலில் இருந்து வெளியூர்களில் வசிப்பவர்களுக்கு பத்திரிகைகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். சிவராத்திரி விழாவில் நள்ளிரவில் ஆணிக்கால் செருப்பு அணிந்து அய்யனார், கருப்பசாமி வேடமணிந்து பாரி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி முக்கிய விழாவாக கருதப்படுகிறது. மாலை 6 மணி அளவில் தொடங்கி நள்ளிரவு வரை பூஜைகள் நடைபெறுவது வழக்கமாகும். கம்பளத்தார் ஜக்கம்மாள் கோவிலில் தேவராட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்படும்.