சந்திர கிரகணத்தையொட்டி கோவில்களில் நடை சாத்தப்பட்டது

சந்திர கிரகணத்தையொட்டி கரூரில் உள்ள கோவில்களில் நடை சாத்தப்பட்டது.

Update: 2022-11-08 19:20 GMT

சந்திர கிரகணம்

பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது அது சூரியனின் நேரடியான ஒளியைப்பெற இயலாமல் போய்விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என்கிறோம். சந்திர கிரகணத்தின்போது சூரியனின் எதிர்த்திசையில் நிலவு வருவதால் சந்திர கிரகணம் பவுர்ணமியின் போதுதான் தெரியும். நிலவு முழுமையாக பூமியின் முழுநிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணமாகும். அதன்படி, முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி நேற்று பகல் 2.38 மணி முதல் மாலை 6.29 மணி வரை நடைபெற்றது.

இதையடுத்து, கரூரில் உள்ள முக்கிய கோவில்களான தாந்தோணி மலையில் அமைந்துள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் மற்றும் பசுபதிஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடை சாத்தப்பட்டது. இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு கோவில் சுத்தம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கோவில் நடை திறப்பு

சந்திர கிரகணத்தையொட்டி நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன் கோவில், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில், கண்டி அம்மன் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் மதியம் முதல் நடை அடைக்கப்பட்டிருந்தது. சந்திரகிரகணம் முடிந்தவுடன் கோவில் நடை திறக்கப்பட்டு கோவில் சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்