நத்தம் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா
நத்தத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.;
நத்தம் கர்ணம் தெருவில் மதுரகாளியம்மன், செல்வவிநாயகர், பாலமுருகன் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மறுநாள் காவல் தெய்வங்களுக்கு பழம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்றிரவு அம்மன் குளத்தில் இருந்து சக்திகரகம் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் அங்கு அம்மனுக்கும், சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, முளைப்பாரி எடுத்தல், அரண்மனை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சக்திகரகம் அம்மன்குளம் கொண்டு செல்லப்பட்டது. நேற்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. இந்த திருவிழாவில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.