தபால் மூலம் வீடுதேடி வரும் கோவில் பிரசாதம்-பக்தர்கள் கருத்து
தபால் மூலம் வீடுதேடி வரும் கோவில் பிரசாதம் குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
திருப்பதி கோவில் பிரசாதத்தை தபால் மூலம் பெறக்கூடிய வசதி இருப்பதுபோல், தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில் பிரசாதங்களை தபாலில் பெற்றுக்கொள்ள அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. ஏற்கனவே சில கோவில்களில் நடைமுறையில் இருந்துவரும் இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படுகிறது.
இதன்மூலம் வீடுகளில் இருந்தபடியே இஷ்டமான கோவிலில் இருந்து பிரசாதத்தை பெறமுடியும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் உள்ள 48 முதுநிலை கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் எந்த அளவில் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறித்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:-
வரவேற்கத்தக்கது
நெல்லையை சேர்ந்த பகவதி ராஜன்:-
தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், பாரம்பரியம், வரலாறு போன்ற பன்முக தகவல்களின் பெட்டகங்களாக திகழ்கின்றன. அத்தகைய கோவில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் அனைவரும் அறிந்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 'திருக்கோவில்' என்ற செயலியை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் கோவில்களில் நடைபெறுகின்ற விழாக்கள், கோவில் திறந்திருக்கும் நேரம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம்.
தற்போது வீடு தேடி கோவில் பிரசாதம் திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் கோவிலுக்கு செல்ல முடியாத வயதானவர்கள், வெளியூர்களில் உள்ள பக்தர்கள் ஆன்லைனில் கோவில் பிரசாதம் வேண்டும் என்று விண்ணப்பித்தால் அவர்களுக்கு தபால் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் வயதானவர்கள், கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தவாறு கோவில் பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம். பழனி, திருச்செந்தூர் கோவில்களில் உள்ள பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பிரசாதங்களை தபால் மூலம் பெற்று அதை பயன்படுத்துவதால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். தபால் நிலையங்களில் காசி தீர்த்தம் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கி பக்தர்கள் தங்களது வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது தெளித்து மகிழ்கின்றனர்.
வணிக நோக்கத்தில்...
பாளையங்கோட்டை கொட்டாரத்தை சேர்ந்த கணேசன்:-
ஒரு ஊரின் அடையாளமாக அந்த ஊரில் உள்ள மிகப்பெரிய கோவில்தான் உள்ளது. இதனால் தான் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பழமொழியும் உண்டு. கோவிலுக்கு முறையாக விரதம் இருந்து சென்று இறைவனை தரிசித்து விட்டு அங்கு கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும். பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் கொடுப்பார்கள். அதை வாங்கி சாப்பிடும்போது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். இதேபோல் சிவன் கோவிலில் வில்வம், விநாயகர் கோவிலில் அருகம்புல் மற்றும் சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்படும். அதை பயன்படுத்தும்போது உடலுக்கு நன்மையும், மனதிற்கு திருப்தியும் கிடைக்கும்.
கோவிலில் இறை சக்தி நிறைந்திருப்பதால் அங்கு சென்று சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெறுவது தான் நல்லது. ஆன்லைனில் பிரசாதம் என்பதை அரசு வணிக நோக்கத்துடன் செயல்படுத்துவதாக கருதுகிறேன். கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தால் தான் புண்ணியம். சுவாமி சன்னதியில் உள்ள பிரசாதம் என்று ஆன்லைனில் அனுப்பி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது கோவில் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படலாம். கோவிலுக்கு சென்று பிரசாதம் வாங்குவதே பக்தர்களுக்கு முழுதிருப்தி அளிக்கும்.
மனநிறைவு தரும்
தென்காசியை சேர்ந்த ஜி.மாடசாமி:-
ஜோதிடரான நான் நீண்ட காலமாக பல்வேறு கோவில்களுக்கும் சென்று வருகிறேன். பண்டைய காலத்தில் பொதுமக்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர். வசதி படைத்தவர்கள் வில் வண்டியில் போனார்கள். இன்னும் வசதி படைத்தவர்கள் குதிரை வண்டியில் சென்றனர். தற்போது வளர்ச்சி பெற்ற சமூகத்தில் கார்களில் செல்கிறார்கள். தற்போதைய வேலைப்பளு சூழலில் குறிப்பிட்ட நேரத்தில் நினைத்த கோவில்களுக்கு செல்ல முடியவில்லை. மேலும் பலர் கோவில்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் செல்ல கஷ்டப்படுகிறார்கள். கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு பிரசாரம் பெறுவது மனதிருப்தி அளிக்கக்கூடியது தான். அதே நேரத்தில் கோவில் பிரசாதம் தபாலில் கிடைப்பதும் வரப்பிரசாதம் தான். யாராவது கோவில்களுக்கு சென்றால் எங்களுக்கும் பிரசாதம் வாங்கி வாருங்கள் என்று கூறுவோம். ஆனால் தற்போது அரசே இதை செய்வதை வரவேற்கிறேன்.
தென்காசியை சேர்ந்த மாரிமுத்து:-
நான் வழக்கமாக கோவிலுக்கு சென்று வருகிறேன். சபரிமலைக்கு ஆண்டுதோறும் மாலை அணிந்து சென்று வருவேன். ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்கும் செல்வது வழக்கம். கோவிலுக்கு சென்றால் நாம் எப்போதும் பிரசாதம் வாங்குவோம். தற்போது தபாலிலேயே பிரசாதம் கிடைப்பது வரவேற்கத்தக்கது. பிரசாதம் நமக்கு வீடு தேடி வரும்போது அது மிகுந்த மனநிறைவை கொடுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தபால்துறை
தபால் துறை அதிகாரிகள் கூறும்போது, 'பக்தர்களின் வீடுகளுக்கு கோவில் பிரசாதம் வழங்கும் திட்டம் நல்ல முன்னெடுப்பாகும். இதன்மூலம் அறநிலையத்துறை மட்டும் அல்லாது தபால் துறைக்கு வருமானம் கிடைக்கும். பக்தர்களுக்கும் மனநிறைவு ஏற்படுகிறது. அதுவும் அனைத்து கிராம அளவில் தபால் அலுவலகங்கள் இருப்பதால் தமிழகத்தின் எந்த மூலைமுடுக்குகளிலும் இருப்பவர்களுக்கு தபால் துறையால் பிரசாதத்தை கொண்டு சேர்க்க முடியும்.
இதுகுறித்து தபால் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளலாம். விரைவான சேவை வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை செய்து பக்தர்கள் நலன் கருதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.
அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'தமிழ்நாட்டில் உள்ள 48 முதுநிலை கோவில் பிரசாதங்களை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் துறை மூலம் அனுப்பி வைக்கும் திட்டத்திற்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள் அந்தந்த கோவில் இணையதள முகவரிக்கு சென்று கோவில் முகவரியை பெற்றுக்கொண்டு, அதில் வீட்டு முகவரி மற்றும் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த வேண்டும். ஓரிரு நாட்களில் பிரசாதம் பக்தர்களின் வீடு தேடி வரும். இதற்காக ஒவ்வொரு கோவிலிலும் தனியாக பணியாட்கள் நியமிக்கப்பட்டு திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுகிறது. கட்டணத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு கோவிலுக்கும் மாறுபடுகிறது.
குறிப்பாக மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு ஆன்லைன் மூலம் ரூ.80 அனுப்பினால் விபூதி, குங்குமம் பிரசாதம் வழங்கப்படுகிறது. திருவல்லிகேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் ரூ.80 கட்டணம் செலுத்தினால் பார்த்தசாரதி பெருமாள் சுவாமி படம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்படுகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.250 செலுத்தினால் பஞ்சாமிர்த டப்பா, விபூதி, குங்குமம், விபூதி, குங்குமம், சந்தனம் மற்றும் கோவில் பூஜை முறைகள், ஸ்தல வரலாறு, பூஜைகளுக்கான கட்டண விவரம் அடங்கிய புத்தகம் அனுப்பப்படுகிறது.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் பிரசாதம் தேவைப்படுபவர்கள் ஆன்லைன் மூலம் ரூ.160-ஐ கோவிலுக்கு செலுத்தினால் 150 கிராம் எடையுள்ள 10 தட்டு வடை, விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் சாமியின் உருவப்படம் ஆகியவை பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும். பிரசாதங்களை உடனுக்குடன் அனுப்பினால் துறையின் நற்பெயர் பாதுகாக்கப்படும். திட்டம் நூறு சதவீதம் வெற்றி பெறுவதுடன், பணம் செலுத்த பிரசாதம் வாங்கும் பக்தர்களுக்கு மனநிறைவை தர வேண்டும். அதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அனைத்து இணை கமிஷனர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மேலும் அதிக எண்ணிக்கையிலான கோவில்களில் பிரசாதம் அனுப்பும் திட்டம் விரிவுப்படுத்தப்படும். பக்தர்கள் தங்கள் திருமண நாள், பிறந்த நாள், பெற்றோர்கள் பிறந்த நாள், கணவன்-மனைவி- குழந்தைகள் பிறந்த நாட்களில் விரும்பும் கோவில்களின் (48 கோவில்கள்) பிரசாதங்களை தபாலில் பெற்று இறையருள் பெறலாம். இந்த திட்டம் மூலம் கோவிலுக்கு வருமானமும் வரும், பக்தர்களுக்கு மனதிருப்தியும் ஏற்படும்' என்றார்.