வடமதுரை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் மாசித்திருவிழா தொடக்கம்

வடமதுரை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் மாசித்திருவிழா நேற்று தொடங்கியது.

Update: 2023-02-25 20:30 GMT

வடமதுரையில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாசித்திருவிழா நேற்று பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் மங்கம்மாள்கேணி விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் மாரியம்மன் கோவிலில் கணபதி ஹோமம், திருமஞ்சனம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. அதன்பிறகு மாலையில் பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மன், பூ அலங்கார ரதத்தில் வடமதுரை நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் அம்மனுக்கு மலர்களை தூவி வழிபாடு செய்தனர்.

திருவிழாவில் வருகிற 5-ந்தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 12-ந்தேதி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், 14-ந்தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதன்பிறகு மாரியம்மன் கங்கையில் இறங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சூரியன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்