தஞ்சை ராஜவீதிகளில் வராகிஅம்மன் வீதிஉலா

தஞ்சை ராஜவீதிகளில் வராகிஅம்மன் வீதிஉலா நடந்தது.

Update: 2023-06-28 20:38 GMT

தஞ்சை பெரியகோவிலில் வராகிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். வராகிஅம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த 18-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வராகிஅம்மனுக்கு இனிப்பு, மஞ்சள், குங்குமம், சந்தனம், தேங்காய்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இறுதிநாளான நேற்று மாலை வராகி அம்மனுக்கு புஷ்பஅலங்காரம் செய்யப்பட்டிருந்தது.தொடர்ந்து இரவு மேளதாளம் முழங்க, பெண்களின் கோலாட்டத்துடன் புஷ்பஅலங்காரத்தில் வராகிஅம்மன் புறப்பாடு நடைபெற்றது. முளைப்பாரி வைக்கப்பட்ட தள்ளுவண்டி முன்னே செல்ல சாமி உருவப்பொம்மைகள் பின்தொடர, புஷ்பஅலங்காரத்தில் வராகிஅம்மன் தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 ராஜவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்