பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் விண்ணதிர தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் விண்ணதிர தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.;

Update: 2023-06-28 21:00 GMT

பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் விண்ணதிர தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

14 ஆண்டுகளுக்கு பிறகு...

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவில் பிரசித்திபெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவிலில் திருப்பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்றன. இதனால் கோவில் கோபுரங்கள் புதுப்பொலிவு பெற்றன. திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலாலய பூஜைகள் நடைபெற்றது.

இந்தநிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. அப்போது புண்யாக வாஜனம், மகா சுதர்சனஹோமம், பாலபூஜை, வாஸ்து பூஜை என பல்வேறு பூஜைகளும், மறுநாள் விஸ்வரூப சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜை, திவ்யபிரபந்த சாற்றுமுறை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 3-ம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. அன்றைய தினம் மதியம் சவுந்தரராஜ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கலச பூஜை நடைபெற்றது. அதன்பிறகு மாலையில் 4-ம் கால யாகசாலை பூஜை மற்றும் மூலமந்திரம், காயத்ரி மந்திரம் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

இந்தநிலையில் நேற்று காலை திருப்பள்ளி எழுச்சியுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. காலை 9 மணிக்கு யாக சாலையில் இருந்து புனிததீர்த்தங்கள் அடங்கிய குடங்கள் மங்கள இசை வாத்தியத்துடன் புறப்பாடாகியது. அப்போது பக்தர்கள் 'கோவிந்தா... கோவிந்தா...' என்ற கோவிந்த நாமம் பாட பட்டாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை எடுத்துக்கொண்டு கோபுர கலசங்கள் உள்ள பகுதிக்கு சென்றனர்.

பின்னர் மூலவர் சன்னதியின் ராஜகோபுர கலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ராஜகோபுரத்தில் பட்டாச்சாரியார் பச்சை கொடியை அசைக்க சரியாக 9.30 மணி அளவில் அனைத்து கோபுரங்களில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. இதையொட்டி கோவிலில் குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் 'கோவிந்தா' கோஷம் விண்ணதிர தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் எந்திரங்கள் மூலம் தெளிக்கப்பட்டது. சில பக்தர்கள் எந்திரங்கள் மூலம் தெளிக்கப்பட்ட புனிதநீரை சிறிய கேன்களில் போட்டி போட்டு பிடித்தனர்.

அன்னதானம்

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றது.

இந்த விழாவில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, தேனி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதன்பிறகு மாலையில் திருக்கல்யாண உற்சவமும், இரவில் கருட வாகனத்தில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்