பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வெள்ளி தேரோட்டம்

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வெள்ளி தேரோட்டம் நடந்தது.

Update: 2022-08-12 16:54 GMT

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வெள்ளி தேரோட்டம் நடந்தது.

ஆடிவெள்ளி

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் வழிபடுவது வழக்கம். அந்த வகையில் பழனி மாரியம்மன் கோவில், ரணகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடி லட்சார்ச்சனையையொட்டி அம்மனுக்கு ஒரு லட்சம் மலர்களால் அர்ச்சனை விழா முடிவடைந்தது.

இந்நிலையில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று வெள்ளி தேரோட்டம் நடந்தது. முன்னதாக உச்சிக்கால பூஜையில் பெரியநாயகி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

வெள்ளித்தேர்

இதையடுத்து இரவு 7 மணிக்கு திருத்தேரேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் இரவு 8.30 மணிக்கு வெள்ளி தேரோட்டம் தொடங்கியது. கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், சாய் கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதா சுப்புராஜ், நகராட்சி கவுன்சிலர் விமலாபாண்டி உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அதன் பின்னர் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்டமானது மாரியம்மன் கோவில், கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு ரதவீதிகள் வழியாக சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்